திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றி வழிபாடு

விண்ணைப்பிளந்த பக்தர்களின் 'அரோகரா' முழக்கம்

கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில், மகாதீபம் இன்று (டிச.13) மாலை ஏற்றப்பட்டது. அப்போது லட்சக்கணக்கில் திரண்டிருந்த பக்தர்களின் ‘அரோகரா’ முழக்கம் விண்ணைப் பிளந்தது.

சிவனின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்த நாளே தீபத்திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

அதன்படி இன்று (டிச.13) காலை நான்கு மணியளவில் அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் மாலையில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளினர். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சி தருகின்ற அர்த்தநாரீசுவரர் உற்சவ கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்பட்டது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்பட்டது.

அதே நேரத்தில் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. ஐந்து அடி உயரமும் 250 கிலோ எடையும் கொண்ட கொப்பரையில் 3,500 லிட்டர் நெய் ஊற்றப்பட்டு, ஆயிரம் மீட்டர் காடா துணியால் ஆன திரியின் மூலம் மகா தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

அப்போது திருவண்ணாமலையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா அரோகரா’ என எழுப்பிய முழக்கம் விண்ணைப் பிளந்தது. தீபத் திருநாளை ஒட்டி திருவண்ணாமலை நகரமே பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தது.

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆயிரக்கணக்கில் போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x