டெல்லியில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஒரே வாரத்தில் 2வது முறையாக மிரட்டல் மின்னஞ்சல்

டெல்லியில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக மிரட்டல் வந்ததால் பீதி நிலவியது. தலைநகர் டெல்லியில் உள்ள 4 பள்ளிகளுக்கு இன்று அதிகாலை (டிச.13) மின்னஞ்சல்கள் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. ‘பெற்றோர் – ஆசிரியர் சந்திப்பு’ மற்றும் ‘விளையாட்டு தினம்’ நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று, மின்னஞ்சல்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து பள்ளிகளுக்கு வந்திருந்த குழந்தைகள் உடனே வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். வராத குழந்தைகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
போலீசார் தீவிர சோதனை
இதுதொடர்பாக கிடைத்த தகவலின் பேரில், தீயணைப்புப் படையினர், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் போலீசார் விரைந்து வந்து தீவிர சோதனை மேற்கொண்டனர். நீண்ட சோதனையில் வெடிண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படாததால், மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது.
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக, டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒரே வாரத்தில் 2வது மிரட்டல்
முன்னதாக கடந்த 9ஆம் தேதியன்று டெல்லியில் 44 பள்ளிகளுக்கு மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது, அவையும் புரளியும் என்று கண்டறியப்பட்டது நினைவுகூரத்தக்கது. ஒரு வாரத்தில் பள்ளிகளுக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கவலை தெரிவித்துள்ளார்.







