மெல்போர்ன் டெஸ்ட்டில் ஆஸி., வீரர் ஸ்டீவன் ஸ்மித் சதம்
இந்திய அணி தடுமாற்றம்; கேப்டன் ரோகித் ஏமாற்றம்

மெல்போர்ன், டிச.27; மெல்போர்ன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முதல் இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் நேற்றைய ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டீவன் ஸ்மித் 68 ரன்களுடனும்,பேட் கம்மின்ஸ் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ஸ்டீவன் ஸ்மித் சதம்

இரண்டாவது நாளான இன்று தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஸ்டீவன் ஸ்மித் அபாரமாக விளையாடி 140 ரன்கள் குவித்தார். பேட் கம்மின்ஸ் 49 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடத்தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் ரோகித் சர்மா 3 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர் ஜெய்ஸ்வாலுடன் கே.எல்.ராகுல் ஜோடி சேர்ந்தார். அவர் 24 ரன்களில் வெளியேற விராட் கோலி களம் புகுந்தார். அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்து அணியை பெரும் சரிவிலிருந்து மீட்டனர்.
இந்திய அணியின் ஸ்கோர் 154 ரன்களாக இருந்தபோது ஜெய்ஸ்வால் பெவிலியின் திரும்ப, அடுத்த சில நிமிடங்களில் கோலியும் 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சதத்தை கோட்டைவிட்ட ஜெய்ஸ்வால்

பொறுப்புடன் விளையாடிய ஜெய்ஸ்வால் சதத்தை நோக்கி மு ன்னேறிய நிலையில், 82 ரன்களுக்கு ரன் அவுட்டானார். இரண்டாவது நாளான இன்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பன்ட் 6 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி 310 ரன்கள் பின்தங்கியுள்ள சூழலில், இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கை சற்று ஓங்கியிருப்பதை மறுப்பதற்கில்லை.







