இந்திய அணியின் ஜெர்சியில் ‘பாகிஸ்தான்’ பெயரா?
இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு; வெடித்தது புதிய சர்ச்சை

மும்பை, ஜன.21; சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், இந்திய அணியின் ஜெர்சியில் போட்டியை நடத்தும் நாடான பாகிஸ்தானின் பெயரை அச்சிட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
8 நாட்டு அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகள், பாகிஸ்தான் மற்றும் துபாயில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறுகின்றது.
எதிர்ப்பால் துபாய்க்கு மாறிய போட்டிகள்

இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் மறுத்ததால், இந்தியா பங்கேற்கும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசியும் இசைவு தெரிவித்துவிட்டன.
இந்தியா ஜெர்சியில் ‘பாகிஸ்தான்’ பெயரா?

இதுபோன்ற சூழலில், இந்திய அணியின் ஜெர்சியில், போட்டியை நடத்தும் நாடான பாகிஸ்தானின் பெயரை அச்சிடுவது தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. பாகிஸ்தான் பெயரை அச்சிடுவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிரிக்கெட்டில் அரசியலை புகுத்துவதா?

இதுதொடர்பாக ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர், “இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் கிரிக்கெட்டில் அரசியலை கொண்டு வருகிறது, இது விளையாட்டிற்கு நல்லதல்ல” என விமர்சித்துள்ளார்.
“போட்டிகளில் விளையாட பாகிஸ்தானுக்கு வர மறுத்ததுடன், தொடக்க விழாவிற்கு தங்கள் அணியின் கேப்டனையும் அனுப்ப அவர்கள் (இந்திய கிரிக்கெட் வாரியம்) விரும்பவில்லை” என்று அவர் குறை கூறியுள்ளார்.
பிசிசிஐ-யின் செயலை ஐசிசி அனுமதிக்காது

போட்டியை நடத்தும் நாட்டின் (பாகிஸ்தான்) பெயரை தங்களது ஜெர்சியில் அச்சடிக்க முடியாது என இந்தியா கூறுவதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதிக்காது என்று, பெயர் குறிப்பிட விரும்பாத அந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.







