“ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்; இங்கி., விளையாடும்”
எதிர்ப்பையும் மீறி போட்டியை உறுதி செய்தது, கிரிக்கெட் வாரியம்

இங்கிலாந்து, பிப்.07; சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து விளையாடும் என்பதை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.
;சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி, வரும் 26ஆம் தேதி லாகூரில் நடைபெற உள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்; இங்கிலாந்து பங்கேற்க எதிர்ப்பு

ஆனால், ஆப்கானிஸ்தானில், தலிபான் ஆட்சியில் பெண்களின் உரிமைகள் கடுமையாக ஒடுக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அந்நாட்டு அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து கலந்துகொள்ளக் கூடாது எனக் குரல் எழுந்தது.
சாம்பியன்ஸ் கோப்பையில், ஆப்கானிஸ்தானின் ஆடவர் அணி பங்கேற்பதற்கு எதிராக இங்கிலாந்து தனது திட்டமிடப்பட்ட போட்டியில் விளையாட மறுத்து, அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் உட்பட பல்வேறு தரப்புகளிலிலிருந்து குரல்கள் ஒலித்தன.
இங்கிலாந்து விளையாடும் என கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

இதனையும் மீறி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து பங்கேற்கும் என்பதை அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் ரிச்சர்ட் தாம்ஸன் உறுதி செய்துள்ளார். வேல்ஸ் கிரிக்கெட் வாரியமும் ஒப்புதல் அளித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பாலின பாகுபாடு தொடர்பாக தெரிவிக்கப்படும் கவலைகளை ஒப்புக்கொள்வதாக ரிச்சர்ட் தாம்ஸன் கூறியுள்ளார்.
“கிரிக்கெட் சமூகத்தின் கூட்டு முயற்சி தாக்கம் ஏற்படுத்தும்”

இருப்பினும், கவனமாக ஆலோசித்த பிறகு,சிக்கலைத் தீர்ப்பதற்கு போட்டியை புறக்கணிப்பது மிகவும் பயனுள்ள வழியாக இருக்காது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது; அதற்கு பதிலாக, கிரிக்கெட் சமூகத்தின் கூட்டு சர்வதேச முயற்சி அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வாரியம் நம்புகிறது என்றும் தாம்ஸன் கூறியிருக்கிறார்.
பெண்கள் கிரிக்கெட் மீதான தலிபானின் தடை மற்றும் பெண் உரிமைகள் மீதான பரந்த கட்டுப்பாடுகள் ஆகியவை கவலையளிப்பதாக கூறியுள்ள ரிச்சர்ட் தாம்ஸன், ஆப்கானிஸ்தானில் நடப்பது “பாலின நிறவெறி” என்றும் விமர்சித்தார்.







