சாம்பியன்ஸ் கோப்பை; சோயிப் அக்தர் கணிப்பு
அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை எனக் கருத்து

துபாய், பிப்.08; சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில், எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கணித்துள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை போட்டி, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது.
சுமார் 30 ஆண்களுக்குப் பின் பாகிஸ்தான் நடத்தும் பெரிய ஐசிசி தொடர்

இதில் விளையாடும் 8 அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1996ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பின்னர், பாகிஸ்தான் ஒரு பெரிய ஐசிசி போட்டித் தொடரை நடத்துவது இதுவே முதன்முறையாகும்.
போட்டிக்கு முன்னதாக, எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்று தான் நம்பும் அணிகளை பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கணித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு; அக்தர்

துபாயில் நடைபெற்ற ஊடக உரையாடலில் பேசிய அக்தர், “ஆப்கானிஸ்தான் அணி முதிர்ச்சியைக் காட்டினால், அவ்வணி அரையிறுதிக்கு முன்னேறலாம்” எனக் கூறியுள்ளார்.
“சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு பாகிஸ்தான், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் முன்னேறும் என்று நான் நம்புகிறேன்” என்று அக்தர் மேலும் கூறினார்.
நான்காவது அணி பற்றியோ அல்லது தற்போதைய உலகச் சாம்பியனான ஆஸ்திரேலியா பற்றியோ அவர் எதுவும் குறிப்பிடவில்லை.
“பாகிஸ்தானும் இந்தியாவும் இறுதிப்போட்டியில் மோதும்”

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் உள்ளதால், அந்த அணிகள் நியூசிலாந்தையும், வங்கதேசத்தையும் நாக் அவுட் செய்யும் என்று அக்தர் நம்புகிறார்.
“பிப்ரவரி 23ஆம் தேதியன்று பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடிக்கும் என்று நான் நம்புகிறேன்; பாகிஸ்தானும் இந்தியாவும் இறுதிப் போட்டியில் சந்திக்கும் என்றும் நான் நம்புகிறேன்,” என்று அக்தர் கூறினார்.







