209 ரன்களில் தமிழ்நாடு வெற்றி
ரஞ்சி கோப்பை தொடரில் அசத்தல்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விஜயசங்கரின் அபார சதத்தால், சண்டிகர் அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
சேலம், ஜன.27; இந்தியா முழுவதும், பி.சி.சி.ஐ.,சார்பில் ரஞ்சி கோப்பை லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ‘டி’ பிரிவில், தமிழ்நாடு -சண்டிகர் இடையிலான டெஸ்ட் போட்டி சேலத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் தமிழ்நாடு 301, சண்டிகர் 204 ரன்கள் எடுத்திருந்தன.

பின்னர் 2வது இன்னிங்சை ஆடிய தமிழ்நாடு 5 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. இதில் ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் அவுட்டாகாமல் 150 ரன்கள் குவித்தார். பின்னர் 2வது இன்னிங்சை ஆடிய சண்டிகர், 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து தடுமாற்றத்தில் இருந்தது.

நேற்று 4ம் நாளில் 2வது இன்னிங்சை தொடர்ந்து ஆடிய சண்டிகர், தமிழக வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியில் 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது சண்டிகர் அணி. இதனால், 209 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு மெகா வெற்றியை பதிவுச் செய்தது. ஆட்ட நாயகன் விருதை விஜயசங்கர் தட்டிச் சென்றார்.

தற்போது 6 போட்டியில் விளையாடி உள்ள தமிழ்நாடு, 3 வெற்றி, 3 ‘டிரா’ என 25 புள்ளிகளுடன் ‘டி’ பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியது. சண்டிகர் அணி (19 புள்ளிகள்) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது.








