தேர்வுக்குழுத் தலைவராக இருக்க விரும்புகிறீர்களா?
முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பதில்

சென்னை, ஜன.25; இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவராக இருக்க விரும்பவில்லை என்று, முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் தேர்வு தொடர்பாக, தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். சஞ்சு சாம்சன், கருண் நாயர் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற நட்சத்திர வீரர்கள் அணியில் சேர்க்கப்படாதது பொதுவெளியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
விமர்சனத்துக்கு ஆளான அஜித் அகர்கர்..!

உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து ரன்கள் குவிக்கும் வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அஜித் அகர்கர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அவரது தேர்வுமுறை கிரிக்கெட் கட்டுப்பாடு வாரிய கண்காணிப்பின் கீழ் வந்துள்ளது.
இதுதொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், “தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கருக்காக அனுதாப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
“தேர்வுக்குழுத் தலைவர் பணி கடினமானது”

“இந்தியாவில் நம்ப முடியாத எண்ணிக்கையில் திறமையான பேட்ஸ்மேன்கள் இருப்பதால், அவர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவராக இருப்பது மிகவும் கடினமானது” எனவும் அஸ்வின் கூறியிருக்கிறார்.
“ஆகவே, நான் தேர்வுக்குழுவின் தலைவராகவோ அல்லது அணியின் மேலாளராகவோ இருக்க விரும்பவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“வரவிருக்கும் நாட்களும் பிரச்னையாக இருக்கும்”

“வரவிருக்கும் ஐபிஎல் சீசனில், சுப்மன் கில் மற்றும் ருதுராஜ் ஆகிய இருவரும் ரன் குவித்தால், அது தேர்வுக் குழுவினருக்கு நிறைய பிரச்சனையாக இருக்கும்” என்று அஸ்வின் தெரிவித்தார்.
“அத்தகைய திறமையான வீரர்களின் கூட்டத்தை கொண்டிருப்பதால் இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களாகிய நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.







