349 ரன்கள் குவித்து உலக சாதனை
பரோடா அணி அதிரடி

டி-20 போட்டியில் 349 ரன்கள் குவித்து உலக சாதனைப் படைத்த பரோடா அணி, 263 ரன் வித்தியாசத்தில் சிக்கிம் அணியை வீழ்த்தி புதிய சரித்திரம் படைத்துள்ளது.
டி-20 கிரிக்கெட் என்னும் 20 ஓவர் போட்டி வந்த பின்பு இன்று எல்லாமே மாயபிம்பமாக மாறியுள்ளன. 20 வருடங்களுக்கு முன்பு ஒரு அணி, ஒவருக்கு 6 ரன்கள் சராசரிக்கு மேல் எடுத்து, 50 ஓவரில் 300 ரன்களை கடந்தால், அது பெரிய சாதனையாக போற்றப்பட்டது. அந்த ரன்கள் அன்றைய நாளிதழ்கள், தொலைக்காட்சிகளில் தலைப்புச் செய்தியாக வாசிக்கப்பட்டன. அவற்றை மாதக்கணக்கில் பேசியபடி மகிழ்ச்சியில் திளைத்தனர் கிரிக்கெட் ரசிகர்கள்.
ஆனால் இன்று எல்லாமே தலைகீழாக மாறியுள்ளன. கிரிக்கெட் ஆடும் கத்துக்குட்டி அணிகள் கூட, டி-20 வரலாற்றில் தினமும் புதுபுது சாதனைகளை அரங்கேற்றி வருகின்றன. இதில் நேற்றும் ஒரு புதிய வரலாறு நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் நடக்கும் உள்ளூர் தொடரான சையது முஷ்தாக் அலி டிராபி ‘டி-20’ டிராபியில்தான் அந்த சாதனை அரங்கேற்றப்பட்டு இருக்கிறது.

இந்துாரில் நடந்த லீக் போட்டி ஒன்றில், பரோடா – சிக்கிம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பரோடா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. முதல் ஒவரில் இருந்தே சரவெடியாக வெடித்த பரோடா துவக்க ஆட்டக்காரர்கள், ஷாஷ்வத் 16 பந்தில் 43 ரன்களும், அபிமன்யுசிங் 17 பந்தில் 53 ரன்களும் குவித்து அதிரடித்தனர். பின்னர் ஷிவாலிக் 17 பந்தில் 55 ரன்கள் எடுக்க, தமது பங்குக்கு விஷ்ணு 16 பந்தில் 50 ரன்கள் அடித்தார். இதனால் பரோடா அணி 10.5 ஓவரிலேயே 202 ரன்கள் குவித்து காண்போரை மலைக்க வைத்தது.

மறுபக்கம் சிக்சர் மழை பொழிந்து 42 பந்தில் அதிரடி சதம் விளாசிய பானு புனியா, சிக்கிம் பந்துவீச்சாளர்களுக்கு மரணப் பயத்தை காட்டிக் கொண்டிருந்தார். இறுதி வரை ஆட்டம் இழக்காத அவர், 51 பந்தில் 134 ரன்கள் குவித்து மைதானத்தில் நங்கூரம் போட்டு நின்றார். இறுதியில் பரோடா அணி 20 ஓவரில் 349/5 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது. முன்னதாக ஜிம்பாப்வே அணி காம்பியாவுக்கு எதிராக 344/4 ரன்கள் (2024) எடுத்ததே உலக சாதனையாக இருந்தது.

நெருங்க முடியாத வெற்றி இலக்கை நோக்கி பயணித்த சிக்கிம் அணிக்கு, அதிகப்பட்சமாக ராபின் மட்டுமே 20 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். மற்றவர்கள் பரோடாவின் பந்துவீச்சையும் எதிர்கொள்ள முடியாமல் பெவிலியன் திரும்பிய வண்ணம் இருந்தனர். இறுதியில் சிக்கிம் அணி 20 ஓவரில் 86/7 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றுப் போனது.

இதனால் பரோடா அணி 263 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதன்மூலம் உலக டி-20 வரலாற்றில் ரன்கள் அடிப்படையில் 4-வது சிறந்த வெற்றியையும் பதிவுச் செய்தது. இந்த போட்டியில் 37 சிக்சர் அடித்ததன் மூலம் டி-20 வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த அணி என்ற மற்றொரு உலக சாதனையும் படைத்தது பரோடா அணி.







