ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் தேதி அறிவிப்பு
இறுதிப்போட்டியை மே 25-க்குப் பதில் ஜூன் 3-ல் நடத்த முடிவு

மும்பை, மே.13; இந்தியா-பாகிஸ்தான் சண்டை காரணமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் வரும் 17ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, இந்தியா பாகிஸ்தான் இடையே மூண்ட சண்டை காரணமாக, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 9ஆம் தேதியன்று நிறுத்தப்பட்டது.
எஞ்சிய சீசனை நடத்துவது என ஆலோசனைக்குப் பின் முடிவு

எஞ்சிய போட்டிகள் நடைபெறுமா என்பது பற்றி நிச்சயமற்ற தன்மை நிலவி வந்த சூழலில், இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து நடத்துவது தொடர்பாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் மத்திய அரசு, பாதுகாப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் விரிவான ஆலோசனை நடத்தியது.
எஞ்சிய 17 போட்டிகள் மே 17ஆம் தேதி தொடங்கும்

அதன் முடிவில், மீதமுள்ள சீசனை மீண்டும் தொடங்குவது என்று முடிவு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, எஞ்சிய 17 போட்டிகள் மே 17ஆம் தேதி தொடங்கி, ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
17 போட்டிகள் 6 மைதானங்களில் நடைபெறும் என்று அறிவித்துள்ள கிரிக்கெட் வாரியம், இறுதிப் போட்டி மே 25ஆம் தேதிக்குப் பதிலாக ஜூன் 3ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
இறுதிப்போட்டி மே 25-க்குப் பதில் ஜூன் 3ஆம் தேதி

பிளே ஆஃப் சுற்றுகளைப் பொறுத்தவரையில் முதல் தகுதிச் சுற்று மே 29ஆம் தேதி நடைபெறும். எலிமினேட்டர் சுற்று ஆட்டம் மே 30ஆம் தேதியும், இரண்டாவது தகுதிச்சுற்று ஜூன் 1ஆம் தேதியும் நடத்தப்படும். இறுதிப் போட்டி ஜூன் 3ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருத்தப்பட்ட அட்டவணையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்ஹெச்) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகளின் சொந்த மைதானப் போட்டிகள் ஹைதராபாத் மற்றும் சென்னையில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளன.
ரத்து செய்யப்பட்ட போட்டி மே 25-ல் நடைபெறும்

தர்மசாலாவில் நடைபெறவிருந்த பிபிகேஎஸ் அணியின் சொந்த மைதானப் போட்டிகள் இப்போது ஜெய்ப்பூரில் நடைபெறும். ரத்து செய்யப்பட்ட போட்டி மே 25 ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நடைபெறும்.
பிளேஆஃப் போட்டிகளுக்கான இடம் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய ஆயுதப்படைகளுக்கு தலைவணங்கும் கிரிக்கெட் வாரியம்

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம், “இந்திய ஆயுதப்படைகளின் துணிச்சலுக்கும், மீள் தன்மைக்கும் வணக்கம் செலுத்த கிரிக்கெட் வாரியம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதாக” தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவத்தின் முயற்சிகள் கிரிக்கெட்டை பாதுகாப்பாக திரும்ப அனுமதித்துள்ளன, லீக்கை வெற்றிகரமாக முடிப்பதை உறுதி செய்யும் அதேவேளையில், தேசிய நலனுக்கான அதன் உறுதிப்பாட்டை கிரிக்கெட் வாரியம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றும், கிரிக்கெட் வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







