எனது நற்பெயரை சிதைக்க முயற்சி: அல்லு அர்ஜூன்
தெலங்கானா முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்கு பதில்

தெலங்கானா: ‘புஷ்பா -2’ பட விவகாரத்தில், தனது நற்பெயரை சிதைக்க முயற்சி நடப்பதாக, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில், ‘புஷ்பா -2’ பட சிறப்பு திரையிடலின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 35 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது 8 வயது மகன் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான்.

போலீஸ் அனுமதியின்றி அல்லு அர்ஜூன் வந்ததால் தான் நெரிசல் ஏற்பட்டு, ஒரு பெண்ணின் உயிர் பறிபோனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு, பின்னர் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இதுபோன்ற சூழலில் ‘புஷ்பா -2’ பட விவகாரம் தெலங்கானா சட்டப்பேரவையில் நேற்று (டிச.21) எதிரொலித்தது. பெண் உயிரிழப்புக்கு அல்லு அர்ஜூன் தான் காரணம் என்று, முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றஞ்சாட்டி இருந்தார்.
எனது நற்பெயரை சிதைக்க முயற்சி

இது தொடர்பாக இன்று (டிச.22) செய்தியாளர்களிடம் பேசிய அல்லு அர்ஜூன், தனது நற்பெயரை சீர்குலைக்க முயற்சி நடைபெறுவதாக விமர்சித்தார்.
தவறான தகவல் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றால் தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். பெண் உயிரிழப்பு விவகாரத்தில் பகிரப்பட்ட கதைகளில் பெரும்பாலானவை தவறானவை என்றும் அவர் கூறினார். கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்தது மற்றும் அவரது மகன் காயமடைந்தது ஒரு விபத்து என அல்லு அர்ஜூன் கூறினார்.








