2 மாதங்களாக சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
அறையில் அடைத்து வைத்து அரங்கேற்றப்பட்ட கொடூரம்

டோம்பிவிலி,மே.26; பள்ளி மாணவியை 2 மாதங்கள் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கருக்கலைப்பு செய்ததுடன், பாலியல் தொழிலிலும் தள்ளிய கொடூரச் சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது.
தானே மாவட்டத்தில், (Dombivli) டோம்பிவிலி என்ற பகுதியில், சிற்றுண்டி கடை நடத்திவரும் தனது தாய் மற்றும் சகோதரியுடன் அந்தச் சிறுமி வசித்து வந்தார்.
தேர்வுக்கு பின் தாயுடன் சண்டையிட்டு வெளியேறிய சிறுமி

15 வயது நிறைந்த அந்தச் சிறுமியின் வீட்டிற்கு மசாலா விற்பனை செய்யும் அசுதோஷ் ராஜ்புத் என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
ஒருநாள், சிறுமி 10ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதிய பின்னர் தனது தாயுடன் வாக்குவாதம் செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள்.
இதனை தெரிந்துகொண்ட ராஜ்புத், சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, சிறுமியை தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளான்.
சிறுமி காணாமல் போனதால் தேடத் தொடங்கிய தாய்

சிறுமி வீடு திரும்பாததால், கவலையடைந்த அவளது தாய் தேடத் தொடங்கினாள். அப்போது அவளை (Dombivli) டோம்பிவிலி பகுதியில் பார்த்ததாகவும், அவள் கோபமாக இருப்பதாகவும், திரும்பி வர மாட்டாள் என்றும் ராஜ்புத் கூறியுள்ளார்.
இருப்பினும், தான் சிறுமியை அழைத்து வருவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். இரண்டு மாதங்களாகியும் சிறுமி வீடு திரும்பாததால், அவளது தாயார் சந்தேகம் கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை

பின்னர் காவல்துறையினர் அந்தச் சிறுமியை தேடத் தொடங்கியபோது, (Dombivli) டோம்பிவிலி சிற்றூரில் உள்ள ஒரு வீட்டில் அவள் அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், அந்தச் சிறுமி இரண்டு மாதங்களாக ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் அந்தச் சிறுமி பல முறை கருவுற்று, கலைக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.
பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட சிறுமி; 4 பேர் கைது

மேலும் அந்தச் சிறுமியை பாலியல் தொழிலிலும் தள்ளியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக ஒரு பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொடூரச் செயலுக்கு காரணமான அசுதோஷ் ராஜ்புத் தப்பியோடிவிட்டான்.
சிறுமியை 2 மாதங்களாக அறையில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன், பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்திய நிகழ்வு மகாராஷ்டிராவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.







