திண்டுக்கல் மருத்துவமனையில் தீ விபத்து

சிறுமி உள்பட 6 பேர் உயிரிழந்த சோகம்

திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 வயது சிறுமி உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் நேருஜி நகர் திருச்சி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலம் அருகே சிட்டி மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனை, தரைத்தளம் உட்பட 4 மாடிகளுடன் இயங்கி வருகிறது. இங்கு நேற்று 45 பேர் சிகிச்சைப் பெற்று வந்ததாக தெரிகிறது.

நேற்றிரவு 9 மணி அளவில் மருத்துவமனையின் வரவேற்பு அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தரைத்தளம் முழுவதும் பரவிய தீயை அங்கிருந்த ஊழியர்கள் அணைக்க முயன்றனர். ஆனாலும் கட்டுக்குள் வராத தீயானது, மளமளவென மேல் தளங்களுக்கு வேகமாக பரவியது. இதனால் மருத்துவமனையின் எல்லா தளங்களிலும் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

அப்போது மருத்துவமனை முழுவதும் கடும் புகைமூட்டம் பரவியது. இதனால் நோயாளிகள் அவர்களது உறவினர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க கடுமையாக போராடினர். மேலும் 15-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

இந்நிலையில் உயிர் தப்பிக்க ஓடிய நோயாளிகள், உறவினர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மின்தூக்கி வழியாக கீழே இறங்க முயன்றனர். அவர்களில் சிலர் லிப்டுக்குள் சிக்கி கொண்டனர். அவர்களை மின்தூக்கியை உடைத்து தீயணைப்புத் துறையினர் மீட்டனர். இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனையில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டு திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 6 வயது சிறுமி உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, எஸ்.பி., பிரதீப் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளை முடுக்கி விட்டனர். மேலும் தீ விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அமைச்சர் ஐ.பெரியசாமி ஆறுதல் கூறினர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x