பகலிரவு டெஸ்டில் ஆஸி., அபார வெற்றி
இந்தியாவை பழி தீர்த்தது

இந்தியாவுக்கு எதிரான அடிலெய்டு 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவில் பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா பங்கேற்று உள்ளது. பெர்த் முதல் டெஸ்டில் 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்தியா. இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக பிங்க் பந்தில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்த இந்தியா, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்டார்க் 6 விக்கெட் சாய்த்தார். பின்னர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக 140 ரன்கள் குவிக்க ஆஸ்திரேலியா 337 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் பும்ரா, சிராஜ் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

2-வது இன்னிங்சிலும் பேட்டிங்கில் தடுமாறிய இந்திய அணி 175 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 5, போலந்து 3 விக்கெட் கைப்பற்றினர். பின்னர் 19 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா, விக்கெட் இழப்பின்றி இலக்கை அடைந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. ஆட்டநாயகன் விருதை டிராவிஸ் ஹெட் வென்றார்.

அடிலெய்டில் கிடைத்த வெற்றியின் மூலம் பெர்த் முதல் டெஸ்டில் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்துள்ள ஆஸ்திரேலியா, நடப்பு டெஸ்ட் தொடரையும் 1-1 என சமன் செய்தது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேனில் வரும் 14-18 வரை நடக்க உள்ளது.

இந்நிலையில் அடிலெய்ட் வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 60.71 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. தோல்வி அடைந்த இந்திய அணி 57.29 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 59.26 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 2வது இடத்திலும், 50.00 புள்ளிகளுடன் இலங்கை 4வது இடத்திலும் உள்ளன.







