மனைவியுடன் பேச ஜெயம் ரவிக்கு உத்தரவு
குடும்பநல நீதிமன்றம் ஆணை

விவாகரத்து கேட்டு நடிகர் ஜெயம் ரவி தொடர்ந்த வழக்கில் அவருடைய மனைவியிடம் சமரச தீர்வு மையத்தின் மூலம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதனால் இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தனது மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக ரவி அறிவித்திருந்தார்.
இந்நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்றும் 2009 ஆண்டு பதிவு செய்த தங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை 3ஆவது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் விசாரணைக்கு வந்தபோது, ஜெயம் ரவி, நேரில் ஆஜராகி இருந்தார். அவரின் மனைவி ஆர்த்தி காணொலி காட்சி மூலமாக ஆஜராகி இருந்தார்.
இதைத்தொடர்ந்து, இருவருக்கும் இடையான பிரச்னை தொடர்பாக குடும்பநல நீதிமன்ற சமரச தீர்வு மையத்தின் மூலமாக இன்றைய தினமே பேச இருவருக்கும் நீதிபதி உத்தரவிட்டார். அங்கு எடுக்கபடும் முடிவு தொடர்பாக விபரங்களை தாக்கல் செய்யவும் நீதிபதி ஆணையிட்டுள்ளார்.







