சிட்னி டெஸ்டில் யாரும் நீக்கவில்லை
பார்ம் இல்லாததால் நானே விலகினேன் - ரோகித் சர்மா விளக்கம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் இருந்து யாரும் என்னை நீக்கவில்லை; பார்மில் இல்லாத காரணத்தால் நானேதான் விலகினேன் என கேப்டன் ரோகித் சர்மா அளித்துள்ள விளக்கத்தால், ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

ரோகித் சர்மா என்றாலே அதிரடிதான்! ஒடிஐ மற்றும் டி-20 போட்டிகளில் அவரது அதிரடியை பார்த்துதான் இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் மீது அதீத ஆர்வத்துடன் உள்ளனர். இருப்பினும் டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மாவின் பெர்பார்மன்ஸ் பெரியளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை. இதற்கு முத்தாய்ப்பாய் அமைந்து விட்டது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கவாஸ்கர் – பார்டர் டெஸ்ட் தொடர்.

கடந்த ஆண்டு ‘டி-20’ உலக கோப்பையை கம்பீரமாக கையில் ஏந்திய ரோகித் சர்மா, கடந்த 5 இன்னிங்சில் 31 ரன்கள் (சராசரி 6.20) மட்டுமே எடுத்திருந்தார். இதனால் கடைசி சிட்னி டெஸ்ட் போட்டியில் அவரது பெயர் இடம் பெறவில்லை. மேலும் கேப்டன் பொறுப்பில் இருந்த ரோகித்துக்கு இது மிகப்பெரிய கவுரவக் குறைச்சலாக பார்க்கப்பட்டது. அத்துடன் சிட்னியில் இந்திய அணியின் ‘டிரஸ்சிங் ரூமிற்கு’ வெளியே விரக்தியுடன் அமர்ந்திருந்த அவரை பார்க்க பாவமாக இருந்தது.

இந்நிலையில் ரோகித் சர்மா அளித்துள்ள விளக்கத்தில், சிட்னி டெஸ்டில் இருந்து என்னை யாரும் நீக்கவில்லை என்றும், பார்மில் இல்லாத காரணத்தால் நானேதான் விலகினேன் என்றும் கூறியுள்ளார். தமது முடிவை பயிற்சியாளர் கம்பீர், பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் அகர்கர் ஏற்றுக்கொண்டனர். நான் மீண்டும் பார்முக்கு திரும்புவேன். நான் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை வெளியில் இருப்பவர்கள் முடிவு செய்ய முடியாது எனவும் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய தொடருடன் நான் ஓய்வு பெறப்போவதாக எப்போதும் அறிவிக்கவில்லை. கிரிக்கெட் என்பது ஒரு குழு விளையாட்டு; நீங்கள் அணியைப் பற்றி சிந்திக்க வேண்டும். நான் சிட்னிக்கு வந்தவுடனே வெளியில் உட்கார முடிவு செய்தேன். மேலும் எனது எதிர்காலத்தை யாராலும் தீர்மானிக்க முடியாது; யாருக்கும் அந்த உரிமை கிடையாது எனவும் ரோகித் சர்மா கூறியுள்ளார்.








