கட்டாக் அரங்கில் விளக்குகள் செயலிழந்த விவகாரம்
ஒடிஷா கிரிக்கெட் சங்கம் விளக்கமளிக்க, மாநில அரசு உத்தரவு

கட்டாக், பிப்.11; கட்டாக் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், விளக்குகள் செயலிழந்தது தொடர்பாக 10 நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறு ஒடிஷா கிரிக்கெட் சங்கத்தை அம்மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
கட்டாக்கில் உள்ள (Barabati) பாராபதி அரங்கில் கடந்த ஞாயிறன்று இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது விளக்குகள் செயலிழந்தன.
கிரிக்கெட் அரங்கில் விளக்குகள் செயலிழந்த விவகாரம்

இதன் காரணமாக போட்டி சுமார் 35 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டதால், அமைப்பாளர்களுக்கு எதிராக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்திய அணி 6.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில், லாங்-ஆன் எல்லையைத் தாண்டி பொருத்தப்பட்டிருந்த கோபுர விளிக்குகள் மினுமினுக்கத் தொடங்கின.
10 நாட்களுக்குள் விளக்கமளிக்க மாநில அரசு உத்தரவு

அவ்விடத்திலிருந்த ஆறு (flood light) ஃப்ளட்லைட் கட்டமைப்புகளில் ஒன்றிற்கு இணைக்கப்பட்ட ஜெனரேட்டர் செயலிழந்ததால், கிட்டத்தட்ட 35 நிமிடம் ஆட்டம் நிறுத்தப்பட்டதாக ஒடிஷா கிரிக்கெட் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விளக்குகள் செயலிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, இது தொடர்பாக விளக்கமளிக்கும்படி ஒடிஷா கிரிக்கெட் சங்கத்தை அம்மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
வீரர்கள், பார்வையாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டது; ஒடிஷா அரசு

இதுதொடர்பாக ஒடிஷா கிரிக்கெட் சங்கத்திற்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், “இந்தச் சம்பவத்தால் வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டது; இடையூறுக்கான காரணத்தை கண்டறியவும், இதுபோன்ற தவறுகளுக்கு காரணமான நபர்களை அடையாளம் காணவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டுமாறு” கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.







