மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்

திமுக அரசைக் கண்டித்து அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

சென்னை, டிச.30 ; அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அதிமுக சார்பில் இன்று (டிச.30) மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களை போலீசார் கைது செய்ததற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.

அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி, அண்ணா பல்கலைக்கழக வளாகம் முன் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோல் அதிமுகவினர் சென்னை, விழுப்புரம், மதுரை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை உள்பட மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அவர்களை போலீசார் கைது செய்தனர்.இதனால் சில இடங்களில் போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் -தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தள்ளுமுள்ளு, வாக்குவாதம், நெரிசல்

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினர், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். திடீர் மறியலால் விழுப்புரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்ததற்கு, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அரசு எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிப்பதாக அவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

 

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x