த.வெ.க பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் கைதாகி விடுவிப்பு
விஜய் அறிக்கையை நகலெடுத்து விநியோகித்ததால் நடவடிக்கை

சென்னை, டிச.30: த.வெ.க தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையை நகலெடுத்து பொதுமக்களுக்கு வழங்கிய விவகாரத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை போலீசார் கைது செய்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தொடர்பாக, நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் தனது கைப்பட எழுதிய அறிக்கை ஒன்றை இன்று (டிச.30) வெளியிட்டிருந்தார்.
விஜய் அறிக்கை நகலெடுத்து விநியோகம்

அதில், “கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்களால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதாக” குறிப்பிட்டிருந்தார்.
“நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனும் இல்லை” என்றும் அந்த அறிக்கையில் விஜய் தெரிவித்திருந்தார்.
அந்த அறிக்கையை நகலெடுத்து த.வெ.க கட்சியின் பெண் நிர்வாகிகள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கும், மகளிர் கல்லூரி வாயில்களில் மாணவிகளுக்கும் விநியோகித்தனர்.
அனுமதியின்றி துண்டுப் பிரசுரம் விநியோகிக்கக்கூடாது, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இடையூறு ஏற்படுத்தக்கூடாது எனக்கூறி, அவர்களை போலீசார் கைது செய்து, ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.
கைதானவர்களை காணச் சென்றவர் கைது

தியாகராயநகரில் வைக்கப்பட்டிருந்த அவர்களை காணச் சென்ற த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தையும் போலீசார் கைது செய்தனர்.
இந்தச் செய்தி சமூக வலைதளங்களில்வேகமாகப் பரவியதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனந்த் கைது செய்யப்பட்டதால் அதிருப்தியடைந்த த.வெ.க-வினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோன்ற சூழலில், புஸ்ஸி ஆனந்த் சிறிது நேரத்திற்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.







