பொங்கல் திருநாளான இன்றும் மழைக்கு வாய்ப்பு
3 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனக்கணிப்பு

சென்னை, ஜன.14; பொங்கல் திருநாளான இன்று (ஜன.14) மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 மாவட்டங்களில் இன்று மழை..

இன்றைய தினம் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் கூறியிருக்கிறது. நாளை முதல் 19ஆம் தேதி வரை தென் தமிழ்நாடு, கடலோர தமிழ்நாடு மற்றும் வட தமிழ்நாட்டிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






