பாஜக எனும் வியக்க வைக்கும் ‘வாஷிங் மெஷின்’…!

நொடிப்பொழுதில் கறைகள் அகலும் அதிசயம்...!!

பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த பின்னர், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய அரசியல் புள்ளிகள் புனிதர்களாகி வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது.

கைது, நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட 25-க்கும் மேற்பட்ட அரசியல் பிரபலங்கள் பாஜகவில் இணைந்த பிறகு, அவர்கள் மீதான ஊழல் வழக்குகள் நீர்த்துப் போய்விட்டன. அந்த வரிசையில் சமீபத்தில் இணைந்திருப்பவர் மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார். பதவியேற்ற மறுநாளே, அவர் மீதான பினாமி வழக்கில் தொடர்புடைய ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் பவார் போன்று, இதற்கு முன்னர் யார் யாரெல்லாம் பாஜகவில் இணைந்த பின்னர் புனிதர்களாகினர் என்கிற பட்டியல் பின்வருமாறு: முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரஃபுல் படேல், ஏர் இந்தியா விமானங்கள் வாங்கியதில் ஊழல் செய்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. 2023-ல் பிரஃபுல் படேல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த பிறகு அவர் மீதான குற்றச்சாட்டை சிபிஐ திரும்பப் பெற்றது.

காங்கிரசிலிருந்து பாஜகவில் சேர்ந்த தற்போதைய அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா மீது, கடந்த 2014 மற்றும் 2015-ல் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியது. சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சுதீப்தா சென்னுடன் ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது. 2015-ல் ஹிமந்த சர்மா பாஜகவில் இணைந்த பின்னர், அவர் மீதான வழக்கில் எந்த நடவடிக்கையும் இல்லை.

இதேபோல், மேற்கு வங்கத்தில் சாரதா நிதி நிறுவன ஊழல் வழக்கில் சுவெந்து அதிகாரி உள்பட திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 11 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. பின்னர், 2020ஆம் ஆண்டு சுவெந்து அதிகாரி பாஜகவில் சேர்ந்ததை அடுத்து, அவர் மீதான வழக்கு நீர்த்துப் போகச்செய்யப்பட்டது.

இவர்கள் தவிர, ஒருங்கிணைந்த சிவசேனா மூத்த தலைவரான பாவனா கவாலி, தெலுங்கு தேசம் எம்.பி.யான சி.எம்.ரமேஷ், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கின் மகன் ரனீந்தர் சிங், சமாஜ்வாதி கட்சி எம்.பி.யாக இருந்த சஞ்சய் சேத், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி.யாக இருந்த கே.கீதா, திரிணாமூல் கட்சியை சேர்ந்த சோவன் சாட்டர்ஜி, தபஸ்ராய், தேசியவாத காங்கிரசின் சகஜ் புஜ்பால், காங்கிரசை சேர்ந்த கிரிபா சங்கர் சிங், திகம்பர் காமத், அசோக் சவான், நவீன் ஜிண்டால், அர்ச்சனா பாட்டீல், கீதா கோடா, பாபா சித்திக், ஜோதி மிர்தா, தெலுங்குதேசம் கட்சியின் சுஜானா சவுதாரி உள்ளிட்டோரும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருந்தனர். அவர்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்புகள் வழக்குகள் தொடுத்து விசாரணை நடத்தி வந்தன.

இவர்கள் அனைவரும் பாஜகவில் சேர்ந்ததை அடுத்து, அவர்கள் மீதான வழக்குகள் நீர்த்துப் போயின. இதை கடுமையாக விமர்சித்து வரும் எதிர்க்கட்சிகள், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் பாஜகவில் இணைந்தால் புனிதர்களாகிவிடுவார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர். உலகிலேயே நேர்மையான கட்சி தங்களுடையது தான் எனக் கூறிக்கொள்ளும் பாரதிய ஜனதா கட்சியினர் இதற்கு பதில் சொல்வார்களா என்றும் எதிர்க்கட்சிகள் வினவி வருகின்றன.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x