அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை
பிரியாணி கடை நடத்தி வருபவர் கைது

சென்னை, டிச.25; சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தலைநகர் சென்னையின் மத்தியப் பகுதியான கிண்டியில் அமைந்திருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இங்கு மூன்றாம் ஆண்டு படித்துவரும் மாணவர் ஒருவரும், இரண்டாமாண்டு பொறியியல் படிக்கும் மாணவி ஒருவரும் நேற்று முன்தினம் (டிச.23) இரவு பல்கலைக்கழக வளாகத்தினுள்பேசிக் கொண்டிருந்தனர்.
சக மாணவரை தாக்கிவிட்டு கொடூரம்

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டுபேர், அந்த மாணவரை தாக்கி காயப்படுத்திவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக நேற்று மாலை (டிச.24) கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் மாணவியின் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதனடிப்படையில் காவல் இணை ஆணையர் தலைமையிலான போலீசார் அண்ணா பல்கலைக்கழகத்தில் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 30-க்கும் அதிகமான ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரியாணி கடை நடத்துபவர் கைது

இதனிடையே, மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நடைபாதையில் பிரியாணி கடை நடத்திவரும் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவியல்பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருக்கும் அந்த நபர், குற்றத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
பாதுகாப்புக்கு முன்னுரிமை: பல்கலைக்கழக பதிவாளர்

இச்சம்பவம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சம்பவம் குறித்து பல்கலைக்கழக உள் புகார்க் குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவம் இனி நிகழாமல் இருக்க அனைத்துவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று பதிவாளர் கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தைப் பொறுத்த வரையில் மாணவர்களின் பாதுகாப்பு முன்னுரிமை அளிக்கப்படும் என, பதிவாளர் பிரகாஷ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.






