மீண்டும் கேப்டனான டேவிட் வார்னர்
வாழ்நாள் தடை நீக்கத்தால் வாய்ப்பு

கேப்டனாக விளையாட விதிக்கப்பட்டிருந்த வாழ்நாள் தடையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நீக்கியதால், பிக்பாஷ் டி-20 லீக் தொடரில், சிட்னி தண்டர்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அதிரடி ஆட்டத்துக்கு சொந்தக்காரர். சமீபத்தில் சர்வதேசப் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்ற நிலையிலும், ஐ.பி.எல்., உட்பட மற்ற உலகின் முன்னணி டி-20 லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக, ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. அத்துடன் எந்த அணிக்கும் கேப்டனாக விளையாடவும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், டேவிட் வார்னர் கேப்டனாக விளையாட விதிக்கப்பட்டிருந்த வாழ்நாள் தடை நீக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பாஷ் டி-20 லீக் தொடரில், சிட்னி தண்டர்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடரில் கேப்டன் பதவிக்கு டேவிட் வார்னர் திரும்பி இருப்பதால், கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.







