திமுக ஆட்சியை அகற்றவிட மாட்டேன்: வைகோ
அண்ணாமலையின் சவால் பலிக்காது என பதிலடி

சென்னை, ஜன.01; திமுக ஆட்சியை அகற்றவிட மாட்டேன் என்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (ஜன.1) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், திமுக கூட்டணி வலுவாக இருப்பதாகவும், 200 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும் எனவும் கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியால் தமிழ்நாட்டில் ஒருபோதும் காலூன்ற முடியாது என்று வைகோ தெரிவித்தார்.
“திமுக ஆட்சியை அகற்ற முடியாது”

“நான் இருக்கும் வரை திமுக ஆட்சியை அகற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் திட்டமிட்டு பணியாற்றி வருவதாக வைகோ தெரிவித்தார்.
பெண்கள், உழவர்கள், மாணாக்கர் என அனைவருக்குமான திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றி வருவதாகவும் வைகோ தெரிவித்தார்.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறை இந்தியாவில் சாத்தியமற்றது எனக் குறிப்பிட்ட வைகோ, மோடியின் மனதில் அதிபராக வேண்டும் என்ற எண்ணம் புதைந்து கிடப்பதாகச் சாடினார்.
“சாட்டையடி போராட்டம் ரசிக்கும்படி இருந்தது”

அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் ரசிக்கும்படி இருந்ததாக கூறிய வைகோ, அவரது சவால் ஒருபோதும் பலிக்காது என்று குறிப்பிட்டார்.
திமுக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வைகோ, கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என்று தெரிவித்தார். விஜய்யின் அரசியல் வருகையால் திமுக கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று வைகோ தனது பேட்டியில் குறிப்பிட்டார்.






