கிங் கோலி 6 ரன்னில் ‘காலி’
எதிர்பார்ப்பு பொய்த்துப் போனதால் ரசிகர்கள் ஏமாற்றம்

டெல்லி, ஜன.31; ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில், டெல்லி அணிக்காக விளையாடும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, ஆறு ரன்களில் அவுட்டானதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்திய தேசிய அணியின் வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதை கிரிக்கெட் வாரியம் கட்டாயமாக்கியுள்ளதை அடுத்து, டெல்லியைச் சேர்ந்த விராட் கோலி, அந்த மாநில அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாடுகிறார்.
ரயில்வே அணிக்கு விளையாடும் ‘விராட் கோலி’

அதன்படி, டெல்லி-ரயில்வே அணிகள் மோதும் போட்டி, டெல்லியில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த ரயில்வே அணி 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பிறகு களமிறங்கிய டெல்லி அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்திருந்தது.
இரண்டாவது நாளான இன்று தொடர்ந்து ஆடிய அந்த அணியில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி, நான்காவது வீரராக களமிறங்கினார்.
கிங் கோலி 6 ரன்னில் ‘கிளீன் போல்டு’

வழக்கமாக ரஞ்சி கோப்பை போட்டிகளில் அரங்கம் வெறிச்சோடி காணப்படும். ஆனால், டெல்லி அணிக்காக 12 ஆண்டுகளுக்குப் பின்னர் கோலி விளையாடுவதால் அவரது ஆட்டத்தைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
ரயில்வே அணியின் பந்துவீச்சாளர் ஹிமான்ஷு சங்வானின் பந்தில் கோலி ஒரு பவுண்டரி அடித்தவுடன் அரங்கமே அதிர்ந்தது. ஆனால், இந்த மகிழ்ச்சி சிறிதுநேரம் கூட நீடிக்கவில்லை.
கோலி ஜொலிக்காததால் ரசிகர்கள் ஏமாற்றம்

இன்ஸ்விங்காக வந்த சங்வானின் அடுத்த பந்தை சரியாக கணிக்கத்தவறியதால், விராட் கோலி கிளீன் போல்டானார். இதனால், கோலியிடமிருந்து மிகப்பெரிய அளவிலான இன்னிங்சை காண வந்திருந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.
கோலியின் விக்கெட்டை வீழ்த்திய ஹிமான்ஷு சங்வானின் கொண்டாட்டம் ரயில்வே அணியின் பந்துவீச்சாளர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உறுதிப்படுத்தியது.







