கார்ல்சனின் கால்களை தொட்டு வணங்கிய இந்திய வீராங்கனை
டாடா ஸ்டீல் சதுரங்க தொடரில் நெகிழ்ச்சி

டாடா ஸ்டீல் இந்தியா சர்வதேச சதுரங்கத் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிரிஸ்டி முகர்ஜி, உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனின் கால்களைத் தொட்டு வணங்கி கோப்பையைப் பெற்றுக்கொண்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் டாடா ஸ்டீல் இந்தியா சர்வதேச சதுரங்கத் தொடர் நடைபெற்றது. இதில் அனைத்து மகளிர் ‘ரேபிட்’ பிரிவில் 7/7 என்ற கணக்கில் பிரிஸ்டி முகர்ஜி முதலிடம் பிடித்தார். அவருக்கு கோப்பையை வழங்க இதே தொடரின் ஆடவர் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் மேடைக்கு வந்தார்.
அப்போது பரிசுக்கோப்பையைப் பெற மேடைக்கு வந்த பிரிஸ்டி முகர்ஜி, முதலில் கார்ல்சனுக்கு வணக்கம் தெரிவித்து, கைகளைக் குலுக்கினார். பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் கார்ல்சனின் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டு, கோப்பையைப் பெற்றுக் கொண்டார். பிரிஸ்டியின் இந்தச் செயல், மேக்னஸ் கார்ல்சனின் முகத்தில் புன்னகையை வரவழைத்ததால், அதனை பிரிஸ்டி வாழ்த்தாக எடுத்துக் கொண்டார்.
பெற்றோர், வயதில் மூத்தவர்கள், பல்துறை மேதைகள், மற்றும் சாதனையாளர்களின் காலில் இளையோர் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெறுவது இந்திய பாரம்பரியத்தில் இரண்டறக் கலந்ததாகும். மேக்னஸ் கார்ல்சன் இதனைப் புரிந்துகொண்டு புன்னகை பூத்தாரா எனத் தெரியவில்லை என்றபோதிலும், அவரது புன்முறுவல் பெரும் வரவேற்பைப் பெற்றது. பிரிஸ்டி முகர்ஜியின் செயலைக் கண்டு அரங்கில் திரண்டிருந்த ரசிகர்கள் பெரும் ஆரவாரம் எழுப்பினர். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி, பாராட்டுகளைப் பெற்று வருகிறது. முன்னதாக நிறைவு விழா நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தின் கால்களிலும் பிரிஸ்ட் முகர்ஜி விழுந்து வாழ்த்துப் பெற்றார்.







