தொடரும் நட்சத்திர ஜோடிகளின் விவாகரத்து…

கோலிவுட் வட்டாரத்தில் கியூட் ஆன ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்த ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதியின் விவாகரத்து செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் வதந்தியாக உலா வந்த செய்தி தற்போது ஊர்ஜிதமாகியுள்ளது. சாக்லேட் பாயாக கோலிவுட்டில் வலம் வந்த ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து 2009இல் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஜெயம் ரவி, ஆர்த்தியின் விவாகரத்து குறித்த தகவல்கள் கடந்த ஜூன் மாதமே வெளியானது. ஆர்த்தி, தனது இன்ஸ்டா பக்கத்தில் இருந்து ஜெயம் ரவியுடன் இருந்த புகைப்படங்களை நீக்கியது அதற்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது. அந்தச் செய்தி வைரலான நிலையில், அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் மௌனம் காத்து வந்த நிலையில், தற்போது ஜெயம்ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை பிரிவதாகக் கூறி அறிக்கை வெளியிட்டு 15 ஆண்டுகால காதல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதில், நீண்டகால யோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவு என்றும், இந்த நேரத்தில் தனது தனியுரிமையையும், தனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கும் மதிப்பளிக்கும்படியும் குறிப்பிட்டுள்ளார்.

எல்லோரது வாழ்விலும் காதல், கல்யாணம், உறவுமுறிவு என அனைத்து பரிமாணங்களையும் கடந்து செல்ல வேண்டியுள்ளது. ஆனால் நட்சத்திரங்களின் வாழ்க்கை சற்று மாறானதாகவே இருக்கிறது. தமிழ் சினிமா வட்டாரத்தில் ரீலைத் தாண்டி நாம் ரசித்த ரியல் ஜோடிகளின் விவாகரத்து செய்திகள் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. சமந்தா – நாகசைதன்யா, தனுஷ்-ஐஸ்வர்யா, ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி பட்டியலில் தற்போது ஜெயம் ரவி – ஆர்த்தி ஜோடியும் இணைந்துள்ளது.
- Viswa







