பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்திய விவகாரம்
அஜர்பைஜான் அதிபரிடம் மன்னிப்பு கோரினார் புதின்

அஜர்பைஜான் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு அந்நாட்டின் அதிபரிடம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

அஜர்பைஜான் பயணிகள் விமானம் கஜகஸ்தான் மீது பறந்தபோது திடீரென தீப்பிடித்து கீழே விழுந்து நொறுங்கியது. அதில் 38 பயணிகள் உயிரிழந்தனர். 29 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த விமானம் தீப்பிடித்து விழுந்து நொறுங்கியதற்கு, ரஷ்ய ஏவுகணை தாக்குதலே காரணம் என உக்ரைன் உள்பட மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டின. இதனை முதலில் ரஷ்யா முற்றிலுமாக மறுத்தது. இந்நிலையில் பல்வேறு தரவுகளின் அடிப்படையில் ரஷ்ய விமான எதிர்ப்பு ஏவுகணைகள் தாக்கியதே பயணிகள் விமான விபத்துக்கு காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவுடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேசியதாக ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், உக்ரைன் நாட்டின் ட்ரோன்களுக்கு எதிராக, செச்சன்யா தலைநகர் கிராஸ்னி அருகே, விமான எதிர்ப்பு ஏவுகணைகள் ஏவப்பட்டன என குறிப்பிடப்பட்டு இருகிறது. எனினும், பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியது குறித்து அந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடவில்லை.

இதனிடையே அஜர்பைஜான் பயணிகள் விமானம் தாக்கப்பட்டதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அஜர்பைஜான் அதிபரிடம் மன்னிப்பு கோரியதாக ஏ.பி., சர்வதேச செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அப்போது இந்த நிகழ்வு ஒரு துயர சம்பவம் என விளாடிமிர் புதின் குறிப்பிட்டதாக ஏ.பி., நிறுவனம் தகவல் கூறியுள்ளது. முன்னதாக ‘வெளியில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலே, அஜர்பைஜான் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்க காரணம்’ என்று அமெரிக்கா மற்றும் அஜர்பைஜான் நாடுகள் வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.








