பாலஸ்தீனியர்களை வெளியேறச் சொல்வதா?
ட்ரம்பின் யோசனைக்கு அதிபர் அப்பாஸ், ஹமாஸ் எதிர்ப்பு

காசா, ஜன.27; போரால் பாதிக்கப்பட்ட காசா பகுதியை சுத்தப்படுத்த பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்கிற அமெரிக்க அதிபர் ட்ரம்பின் யோசனைக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
15 மாத கால போருக்குப் பின்னர் காசா போர்நிறுத்தம் இரண்டாவது வாரத்திற்குள் நுழைந்துள்ள வேளையில், “காசா இடிக்கப்பட வேண்டிய பகுதியாக மாறிவிட்டது” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்தார்.
ட்ரம்ப் யோசனை; ஜோர்டான் நிராகரிப்பு

பாலஸ்தீனியர்களை காசாவிலிருந்து எகிப்து மற்றும் ஜோர்டானுக்கு நகர்த்துவது குறித்து ஜோர்டான் மன்னர் அப்துல்லாவிடம் பேசியதாக ட்ரம்ப் கூறியிருந்தார்.
இதனை ஏற்க மறுத்த ஜோர்டான் வெளியுறவு அமைச்சர் அய்மன் சஃபாடி, பாலஸ்தீனியர்களின் இடப்பெயர்வை தாங்கள் நிராகரிப்பது உறுதியானது, மாறாதது எனவும் கூறினார்.
“பாலஸ்தீனம் பாலஸ்தீனியர்களுக்கே சொந்தம்..”

ஜோர்டான் எப்படி ஜோர்டான் நாட்டவருக்கு சொந்தமானதோ, அதேபோன்றுதான் பாலஸ்தீனம் பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமானது எனவும் சஃபாடி தெரிவித்தார்.
காசாவிலிருந்து சினாய் பாலைவனத்திற்கு பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்வதை ஏற்க முடியாது என்று எகிப்து மன்னர் கூறியதையும், அய்மன் சஃபாடி சுட்டிக்காட்டினார்.
ட்ரம்பின் யோசனை; பாலஸ்தீன அதிபர் எதிர்ப்பு

இதுபோன்ற சூழலில், காசாவிலிருந்து பாலஸ்தீனயர்களை அப்புறப்படுத்தும் ட்ரம்பின் யோசனைக்கு ஹமாஸ் அமைப்பு மற்றும் பாலஸ்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“எங்கள் மக்களை காசா பகுதியிலிருந்து வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்ட எந்தவொரு திட்டத்தையும் ஏற்க முடியாது” என்று அதிபர் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
“பாலஸ்தீன மக்கள் தங்கள் நிலத்தை கைவிடமாட்டர்”

பாலஸ்தீன மக்கள் “தங்கள் நிலத்தையும் புனித தலங்களையும் கைவிட மாட்டார்கள்” என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“1948 மற்றும் 1967 ஆம் ஆண்டுகளில் எங்கள் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவுகளை மீண்டும் செய்ய அனுமதிக்க மாட்டோம்” என்று அதிபர் மஹ்முத் அப்பாஸின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







