No Parking பலகைகளுக்கு No!

சென்னையில் அனுமதியின்றி ‘நோ பார்க்கிங்’ அறிவிப்பு பலகைகள் வைப்பதற்கு சென்னை போக்குவரத்து காவல்துறை தடை விதித்துள்ளது.
மேலும் இது குறித்து ஒரு விளக்கத்தையும் அளித்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: சென்னை போக்குவரத்து காவல்துறை குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் “நோ பார்க்கிங்” சைன்போர்டுகள், மண் பைகள், தடுப்புகளை வைப்பது அதிகரித்து வருவதை கண்டறிந்துள்ளது. மேலும், முறையான அங்கீகாரம் இல்லாமல் பொது சாலைகளில் மற்ற தடைகள் போன்ற இந்த நடைமுறையால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதுடன், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தேவையற்ற இடையூறு ஏற்படுகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முன் அனுமதியின்றி, ‘நோ பார்க்கிங்’ பலகைகள். தடுப்புகள் அல்லது இதுபோன்ற தடைகளை பொதுச் சாலைகளில் வைக்க எந்தவொரு தனிநபருக்கோ, குடியிருப்பு சங்கங்களுக்கோ அல்லது வணிக நிறுவனங்களுக்கோ அனுமதி இல்லை என சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், சாலையோரம் மற்றும் பொது இடங்களில் தனியார் வாகன நிறுத்தம் அல்லது பிற நோக்கங்களுக்காக அனுமதியின்றி ஆக்கிரமிப்பது சட்டவிரோதமானது என கூறியுள்ளது.
மோட்டார் வாகனச் சட்டம் 1988இன் பிரிவு 116இன் படி, போக்குவரத்துப் பலகைகளை அமைக்க அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. எனவே உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அனுமதியின்றி பலகைகள் அல்லது பொருட்களை வைத்து, பொதுச் சாலைகளுக்கு இடையூறாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவது குறித்து பொதுமக்கள் 103 அல்லது 100 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் எனவும், விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என கூறியுள்ளனர். அங்கீகரிக்கப்படாத இடங்களில் ‘நோ பார்க்கிங்’ பலகைகள், தடுப்புகள் மற்றும் பிற இடையூறுகளை வைத்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். பொதுமக்கள் தங்கள் வாகனங்களை சாலைகளில் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் நிறுத்த வேண்டாம் என்று போக்குவரத்து காவல்துறை கூறியுள்ளது.
வாகன நிறுத்தம் தொடர்பான பலகைகளை வைப்பதற்கு முன், அரசு போக்குவரத்து அதிகாரிகளிடம் இருந்து உரிய அனுமதிகளைப் பெற வேண்டும் எனவும் சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை (GCTP),விதிமீறுபவர்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்க நகரம் முழுவதும் வழக்கமான சோதனைகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளனர்.






