இஸ்ரேல் பிரதமருக்கு டொனால்டு ட்ரம்ப் அழைப்பு
பதவியேற்புக்கு பின் அழைக்கப்படும் முதல் வெளிநாட்டு தலைவர்

ஜெருசலேம், ஜன.29; அமெரிக்காவுக்கு வருகை தருமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு, அதிபர் டொனால்டு ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்ற பின்னர் வெள்ளை மாளிகைக்கு அழைப்பு விடுக்கப்படும் முதல் வெளிநாட்டுத் தலைவர் பெஞ்சமின் நெதன்யாகு ஆவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெதன்யாகுவிற்கு ட்ரம்ப் அழைப்பு

நெதன்யாகுவை பிப்ரவரி 4ஆம் தேதி வெள்ளை மாளிகையில் நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கு வருமாறு அழைத்துள்ளதாகவும் இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் கூறியிருக்கிறது.
நெதன்யாகுவிற்கு அழைப்பு விடுத்துள்ளதை உறுதி செய்துள்ள வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர்,”தேதி மற்றும் நேரம் பற்றிய விவரங்கள் இறுதி செய்யப்பட்டவுடன் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
காசா போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து பேச அழைப்பா?

காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸூக்கும் இடையிலான போர்நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும்படி ட்ரம்ப் இஸ்ரேலை தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், நெதன்யாகுவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
டொனால்டு ட்ரம்ப் முதன்முறையாக அதிபராக இருந்தபோது, “வெள்ளை மாளிகையின் சிறந்த நண்பன் இஸ்ரேல்” என அடிக்கடி கூறி வந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.







