சாம்பியன்ஸ் கோப்பை; கேப்டன்களின் சந்திப்பு இல்லை
குழுபுகைப்பட நிகழ்வும் கிடையாது என அறிவிப்பு

லாகூர், ஜன.31; சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்னர் கேப்டன்களின் சந்திப்பு அல்லது குழுவாக புகைப்படம் எடுக்கும் நிகழ்வு, இம்முறை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ICC-யின் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்னர் போட்டியில் பங்கேற்கும் அணிகளின் கேப்டன்கள் சந்திப்பு மற்றும் குழுவாக புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடைபெறுவதுண்டு. அதேபோன்று தொடக்க விழாவும் நடத்தப்படுவதுண்டு.
கேப்டன்கள் சந்திப்பு, குழு புகைப்படம் இருப்பதுண்டு

ஆனால், கடந்த 2017ஆம் ஆண்டு பிரிட்டனில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், கேப்டன்களின் சந்திப்பு மற்றும் குழுவாக புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்ற போதிலும், தொடக்க விழா நடத்தப்படவில்லை.
ஆனால், அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான தொடக்க விழா நடைபெறுமா என்பது பற்றி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
தொடக்கத்தை குறிக்கும் வகையிலான நிகழ்வுக்கு ஏற்பாடு

இருப்பினும், தொடர் தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்குப் முன்னர், அதாவது பிப்ரவரி 16ஆம் தேதியன்று, சாம்பியன்ஸ் கோப்பை தொடங்குவதை குறிக்கும் வகையில் லாகூரில் ஒரு நிகழ்வை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் என்று, அதன் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆதரிக்கும் என்றும், அதில் ஐசிசி அதிகாரிகள் பங்கேற்பார்கள் என நம்புவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை பிப்.19ஆம் தேதி தொடக்கம்

பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில், A பிரிவில் உள்ள பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.







