“இரண்டு வீரர்கள் தில்லுமுல்லு ரஜினியைப் போன்றவர்கள்”
சூர்யகுமார், சஞ்சு சாம்சன் பேட்டிங் குறித்து அஸ்வின் ஒப்பீடு

சென்னை, பிப்.04; இந்திய கிரிக்கெட் வீரர்கள் சூர்யகுமார், சஞ்சு சாம்சன் ஆகிய இருவரின் பேட்டிங் அணுகுமுறை மிக மோசமாக இருப்பதாக, முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சித்துள்ளார்.
அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட போதிலும், ஒரு நுணுக்கமான பார்வையாளராகவும், விளையாட்டை உற்று நோக்குபவராகவும் இருந்து வருகிறார்.
யூடியூப் சேனலில் தொடர்ந்து பேசிவரும் அஸ்வின்

அவ்வாறு கடந்துவரும் விசயங்கள் குறித்து அஸ்வின் தனது யூடியூப் சேனலில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், அண்மையில் முடிவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் ஆட்டம் குறித்து அஸ்வின் பேசியுள்ளார்.
சூர்யகுமார், சஞ்சு சாம்சன் பேட்டிங் குறித்து விமர்சனம்

இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றிவிட்டபோதிலும், அனைத்தும் மகிழ்ச்சியாக இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கேப்டன் சூர்யகுமார் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரின் பேட்டிங்கில் உள்ள குறைகளை அஸ்வின் சுட்டிக்காட்டி உள்ளார்.
“ஒரே மாதிரியான ஷாட்.. ஒரே மாதிரியான அவுட்”

அவர்கள் இருவரும் ஒரே மாதிரியான ஷாட்கள் மற்றும் ஒரே மாதிரியான பந்துகளில் விளையாடி மீண்டும் மீண்டும் ஆட்டமிழக்கிறார்கள் என்று அஸ்வின் விமர்சித்தார்.
ரஜினிகாந்த் நடித்த தில்லுமுல்லு படத்தை மேற்கோள் காட்டி சூர்யகுமாரையும், சாம்சனையும் அஸ்வின் கிண்டல் செய்துள்ளார்.
“சூர்யகுமாரும், சாம்சனும் தில்லுமுல்லு பட ரஜினி போன்றவர்கள்”

“அந்தப் படத்தில் ரஜினிகாந்த் இரண்டு வெவ்வேறு நபர்களாக நடித்திருப்பார்; ஒருவர் மீசையுடனும் மற்றொருவர் மீசை இல்லாமலும் இருப்பார்கள்; சூர்யகுமார் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரையும் பார்க்கும் போது அப்படித்தான் உணர்கிறேன்” என ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.







