13 தொகுதிகளில் ஆம் ஆத்மியின் தோல்விக்கு யார் காரணம்?
பாஜகவின் வெற்றி வித்தியாசத்தைவிட காங்கிரஸ் அதிக வாக்குகள்

டெல்லி, பிப்.09; டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
2012ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது அப்போதைய தோழர்களால் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, டெல்லி தேர்தலில் இவ்வளவு மோசமான தோல்வியை இதுவரை சந்தித்ததில்லை.
காங்கிரஸ் வாக்குகளைவிட குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி

அக்கட்சியின் பல தலைவர்கள் தாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் காங்கிரஸ் பெற்ற வாக்குகளைவிட குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர்.
2013ஆம் ஆண்டு முதல் நியூடெல்லி தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்ற முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இம்முறை தோல்வியைத் தழுவினார். அவர், பாரதிய ஜனதா வேட்பாளர் பர்வேஷ் வர்மாவிடம் 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
நியூடெல்லி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் தீட்சித் 4,568 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இதே தொகுதியில் தான் 2013இல், சந்தீப் தீட்சித்தின் தாயார் ஷீலா தீட்சித்தை தோற்கடித்து கெஜ்ரிவால் முதலமைச்சரானார்.
மணிஷ் சிசோடியா 675 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி

ஜங்புரா தொகுதியில் முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா பாரதிய ஜனதாவின் தர்விந்தர் சிங் மார்வாவிடம் 675 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். ஜங்புரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஃபர்ஹாத் சூரிக்கு 7,350 வாக்குகள் கிடைத்தன.
பட்பர்கஞ்ச் தொகுதியில் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த சிசோடியாவுக்கு அந்த தொகுதி கடினமானதாக கருதப்பட்டதால், அவர் ஜாங்புரா தொகுதியில் போட்டியிட்டார்.
ஆம் ஆத்மி மூத்த தலைவர் சவுரப் பரத்வாஜ் தோல்வி

கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சவுரப் பரத்வாஜ் 3,188 வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டு முறை கவுன்சிலராக இருந்த பாஜகவின் ஷிகா ராயிடம் தோல்வியடைந்தார். இங்கு காங்கிரஸ் வேட்பாளர் கார்விட் சிங்வி 6,711 வாக்குகள் பெற்றார்.
கிரேட்டர் கைலாஷில் மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த பரத்வாஜ், கெஜ்ரிவால் அரசில் உள்துறை, சுகாதாரம், மின்சாரம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி கேபினட் அமைச்சராக இருந்தவர்.
மாளவியா நகரில் சோம்நாத் பார்தி தோற்றுப்போனார்

மாளவியா நகர் தொகுதியில், ஆம் ஆத்மியின் தலைவர் சோம்நாத் பார்தி, பாரதிய ஜனதாவின் முன்னாள் கவுன்சிலரான சதீஷ் உபாத்யாய்விடம் 2,131 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜிதேந்தர் குமார் கோச்சார் 6,770 வாக்குகள் பெற்றார்.
உச்ச நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றும் சோம்நாத் பார்தி, 2013ஆம் ஆண்டு முதல் மாளவியா நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறார்.
துணை சபாநாயகர் ராக்கி பிர்லாவும் தோல்வி

மங்கோல் பூரி தொகுதியில் மூன்று முறை எம்.ஏல்.ஏ-ஆக இருந்த துணை சபாநாயகர் ராக்கி பிர்லா , இந்த முறை மடிப்பூர் தொகுதியில் களமிறக்கப்பட்டார். அவர், பாஜகவின் கைலாஷ் கங்வாலிடம் 10,899 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜே.பி பன்வார் 17,958 வாக்குகளைப் பெற்றார்.
ராஜிந்தர் நகரில் துர்கேஷ் பதக் பாஜகவின் உமாங் பஜாஜிடம் 1,231 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு காங்கிரஸ் வேட்பாளர் வினீத் யாதவ் 4,015 வாக்குகள் பெற்றார்.
ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள் பலர் தோற்றனர்

கட்சி எம்எல்ஏ ராகவ் சதா மாநிலங்களவை உறுப்பினரானதால், ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினரான பதக், 2022இல் ராஜிந்தர் நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதன்முறையாக வெற்றி பெற்றார்.
தினேஷ் மொஹானியா 344 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி

ஆம் ஆத்மி கட்சியின் சங்கம் விஹார் தொகுதி எம்எல்ஏ தினேஷ் மொஹானியா பாஜகவின் சந்தன் குமார் சௌத்ரியிடம் வெறும் 344 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் காங்கிரஸின் ஹர்ஷ் சவுத்ரி 15,863 வாக்குகள் பெற்றார்.
மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த மொஹானியா 2016இல் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இதேபோன்று ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் தோல்வியடைந்த பட்லி, சத்தர்பூர், மெஹ்ராலி, நங்லோய் ஜாட், திமர்பூர் மற்றும் திரிலோக்புரி ஆகிய தொகுதிகளிலும் பாரதிய ஜனதா வேட்பாளர்களின் வெற்றி வாக்கு வித்தியாசத்தைவிட காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளனர்.







