டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சி
அரவிந்த் கெஜ்ரிவால், சிசோடியா உள்ளிட்ட தலைவர்கள் தோல்வி

டெல்லி,பிப்.09; டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி 27 ஆண்டுகளுக்குப் பின்னர் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (பிப்.08) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சி

இதில், பாரதிய ஜனதா கட்சி 48 தொகுதிகளில் வெற்றிபெற்று, ஆட்சியைப் பிடித்திருக்கிறது. ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு 22 இடங்கள் மட்டுமே கிடைத்தது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
கெஜ்ரிவால், சிசோடியா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தோல்வி

ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், நியூடெல்லி தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் பர்வேஷ் வர்மாவிடம் 4,089 வாக்குகள் வித்தியாசத்தில்தோல்வியைத் தழுவினார்.
இதேபோல் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் துணை முதலமைச்சருமான மணிஷ் சிசோடியா ஜங்புரா தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் தர்விந்தர் சிங் மார்வாவிடம் வெறும் 675 வாக்குகள் வித்தியாசத்தில்தோற்றுப் போனார்.
முதலமைச்சர் அதிஷி உள்ளிட்ட தலைவர்கள் வெற்றி

தற்போதைய முதலமைச்சர் அதிஷி உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் சில தலைவர்கள் வெற்றிபெற்று மீண்டும் சட்டப்பேரவைக்கு செல்கின்றனர்.
13 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி பெற்ற வெற்றி வித்தியாசத்தை விட காங்கிரஸ் அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி தொடர்ந்திருந்தால் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைத் தக்க வைத்திருக்கும் என்று தேர்தல் நிபுணர்கள் கூறுகின்றனர்.







