பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி

ஆடவர் ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரில் பாகிஸ்தானை அபாரமாக வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் கோப்பையை இந்தியா தட்டிச் சென்றுள்ளது.
21 வயதினருக்கான 10-வது ஆடவர் ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது. இதில் 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதின. இதன் முடிவில் இந்தியா, ஜப்பான், பாகிஸ்தான், மலேசியா அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறின. இதில் நடப்புத் தொடரில் தோல்விகளே சந்திக்காத நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன.

நேற்று நடந்த விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், ஆட்டம் தொடங்கிய 3 நிடத்திலேயே முதல் கோல் அடித்து பாகிஸ்தான் வீரர் ஹனன் ஷாகித் அதிர்ச்சி அளித்தார். இதற்கு அடுத்த நிமிடத்திலேயே கோல் அடித்து பதிலடி கொடுத்தார் இந்தியாவின் அராய்ஜீத் சிங் ஹண்டல். தொடர்ந்து அசத்திய அவர், 18 நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து இந்தியாவை முன்னிலை பெற செய்தார். 19 நிமிடத்தில் இந்திய வீரர் தில்ராஜ் சிங் மீண்டும் ஒரு கோல் அடித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். இதற்கு 30 நிமிடத்தில் பாகிஸ்தானின் சூபியான்கான் பதில் கோல் அடிக்க, முதல் பாதியில் இந்தியா 3-2 என முன்னிலை பெற்றது.

பின்னர் 2-வது பாதியின் 39 நிமிடத்தில் பாகிஸ்தானின் சூபியான்கான் மீண்டும் ஒரு கோல் அடிக்க, ஆட்டம் சமன் ஆனதால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இருப்பினும் 47 மற்றும் 54 நிமிடங்களில் அராய்ஜீத் சிங் ஹண்டல் அடுத்தடுத்து 2 கோல்கள் பறக்கவிட இந்தியாவின் வெற்றி உறுதியானது. இறுதியில் 5-3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி 5-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதித்துள்ளது.

கடந்தமுறை போலவே இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மீண்டும் மண்ணை கவ்வியதால் அவ்வணி ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். பைனல் ஆட்டத்தில் 4 கோல்கள் அடித்து அசத்திய இந்திய வீரர் அராய்ஜீத் சிங் ஹண்டல், ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.







