“சாஹலின் கிரிக்கெட் வாழ்க்கை முடிக்கப்பட்டுவிட்டது”
கிரிக்கெட் வாரியம் மீது முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சாடல்

மும்பை, ஜன.22; சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலின் கிரிக்கெட் தொழில் வாழ்க்கை முடிக்கப்பட்டுவிட்டதாக, கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் மீது முன்னான் வீரர் ஆகாஷ் சோப்ரா குற்றஞ்சாட்டி உள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியின் தேர்வு குறித்து பொதுவெளியில் விவாதங்களும் சர்ச்சைகளும் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
“வெளிப்படையான காரணமின்றி முடித்துவிட்டனர்”

இதுபோன்ற சூழலில், தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள முன்னாள் வீரர் சோப்ரா, மோசமாக செயல்படாத போதிலும் யுஸ்வேந்திர சாஹல் இந்திய ஒருநாள் அணியில் நீண்ட காலமாக இடம்பெறவில்லை என்று கூறினார்.
“யுஸ்வேந்திர சாஹலின் கிரிக்கெட் தொழில் வாழ்க்கை வெளிப்படையான காரணம் எதுவுமின்றி கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் முழுவதுமாக முடித்துவிட்டது; அவரது கோப்பு மூடப்பட்டுவிட்டது; அவர்கள் (கிரிக்கெட் வாரியம்) ஏன் அப்படி செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை” என்று சோப்ரா மேலும் தெரிவித்துள்ளார்.
“சாஹல் சிறப்பாகவே செயல்பட்டார்”

“யுஸ்வேந்திர சாஹல் இந்திய அணியில் விளையாடி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது, அவர் நிறைய விக்கெட்டுகளை எடுத்துள்ளார், தொடர்ந்து சிறப்பாகவே செயல்பட்டு வந்தார்” எனவும் ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.
யுஸ்வேந்திர சாஹல் இந்திய அணிக்காக 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆகஸ்ட் 2023 முதல் இந்தியாவுக்காக எந்த வடிவிலான போட்டியிலும் அவர் சேர்க்கப்படவில்லை. 2024/25ஆம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே கோப்பை போட்டியிலும் பங்கேற்கவில்லை.
மனைவியை பிரிந்ததாக வந்த செய்தி

சாஹல் சமீபத்தில் தனது மனைவி தனஸ்ரீ வர்மாவிடமிருந்து பிரிந்ததாக செய்திகள் வெளியான கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது.







