வீரர்களின் ‘kit’-ல் பாகிஸ்தான் என அச்சிட எதிர்ப்பா?
இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசி உறுதியான பதில்

துபாய், ஜன.22; சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்தும் நாடு என்பதால், வீரர்களின் ‘kit’-ல் ‘பாகிஸ்தான்’ என்று எழுத இந்திய அணி கடமைப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் ஐசிசி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய அணியின் ஜெர்சியில் ‘பாகிஸ்தான்’ என்று அச்சிட இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோன்று டீம் இந்தியாவின் சாம்பியன்ஸ் கோப்பை கிட்களில் ‘பாகிஸ்தான்’ என அச்சிடப்படுவதையும் இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிசிசிஐ-க்கு ஐசிசி உறுதியான செய்தி?

இது தொடர்பாக, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடமிருந்து உறுதியான செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
போட்டியை நடத்தும் நாடு என்பதால், ‘kit’-ல் ‘பாகிஸ்தான்’ என்று அச்சிட இந்திய அணி கடமைப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
“சின்னத்தை ஜெர்சியில் சேர்ப்பது பொறுப்பு..!”

“போட்டியின் சின்னத்தை தங்களது ஜெர்சியில் சேர்ப்பது ஒவ்வொரு அணியினரின் பொறுப்பாகும்; அனைத்து அணிகளும் இந்த விதிக்கு இணங்க கடமைப்பட்டுள்ளன” என்று ஐசிசி அதிகாரி ஒருவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடும் நடவடிக்கை என எச்சரிக்கை?

சாம்பியன்ஸ் டிராபி இலச்சினை, போட்டியை நடத்தும் நாடான ‘பாகிஸ்தான்’ ஆகியவை வீரர்களின் கிட்டில் இல்லாவிட்டால், இந்திய அணிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்ததாகத் தெரிகிறது.







