மினி நியூஸ்

  • லாஸ் ஏஞ்சலஸில் வேகமாகப் பரவுகிறது காட்டுத்தீ

    லாஸ் ஏஞ்சலஸ், ஜன.9 ; அமெரிக்காவில், கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸில் காட்டுத்தீ பரவியுள்ளதால், ஹாலிவுட் பகுதியில் வசிப்போர் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். லாஸ் ஏஞ்சலஸில் கடந்த சில நாட்களாக எரிந்துவரும் காட்டுத்தீ புதிய பகுதிகளுக்கும் பரவியுள்ளது. ஹாலிவுட்டிலிருந்து நூறு மீட்டர் தொலைவில் தீ எரிவதால், அங்கு வசிப்போரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஹாலிவுட்டில் குடியிருப்பவர்களை உடனடியாக வெளியேறும்படி தீயணைப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர். ஹாலிவுட் பகுதி மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • சாம்பியன்ஸ் கோப்பைக்கான அணியில் ரோகித், கோலி?

    மும்பை, ஜன.9 ; ஃபார்மில் இல்லாத ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. ஆனாலும், இந்த வார இறுதியில் தேர்வுக்குழுவினர் கூடும் போது, 50 ஓவர் வடிவத்தில் அவர்களது எதிர்காலம் குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடிய கே.எல். ராகுல், முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்றும் பேசப்படுகிறது.    

  • கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலிடமிருந்து மணவிலக்கா?

    டெல்லி, ஜன.9 ; கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலிடமிருந்து மணவிலக்குப் பெறப் போவதாக வெளியான வதந்திகள் பற்றி அவரது மனைவி தனஸ்ரீ வர்மா மௌனம் கலைத்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள தனஸ்ரீ, கடந்த சில நாட்கள் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆதாரமற்ற, உண்மையல்லாத செய்திகள் சமூக வலைதளங்களில் எளிதில் பரப்பப்படுவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக அரும்பாடுபட்டு கட்டியெழுப்பிய தனது பெயரை, முகம் தெரியாதவர்கள் சீர்குலைத்துவிடுவதாக தனஸ்ரீ விமர்சித்துள்ளார்.    

  • தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்த ராணுவ வீரர்

    ஜம்மு காஷ்மீர், ஜன.8 ; ஜம்மு காஷ்மீரில், ராணுவ வீரர் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். கிருஷ்ண குமார் என்ற அந்த சிப்பாய், தனது தற்கொலைக் குறிப்பில், ஒரு பெண் மற்றும் அவரது கூட்டாளிகளால் துன்புறுத்தலுக்கு ஆளானதால், இம்முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளார். அவர்கள், வீடியோ காலில் மிரட்டி தன்னிடம் ரூ.15 லட்சத்தை பறித்ததாகவும் எழுதி வைத்துள்ளார். கிருஷ்ண குமாரின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யும் வரை இறுதிச் சடங்குகளை செய்யப்போவதில்லை என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  

  • சோகமான தருணத்தில் வியட்நாம் பயணம் ஏன்?

    கொல்கத்தா,  ஜன. 8 ; மன்மோகன் சிங் மறைந்து நாடே சோகத்தில் ஆழ்ந்திருக்கும் வேளையில், ராகுல் காந்தி வியட்நாம் சென்றது குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஷ்தா முகர்ஜி வினவியுள்ளார். ராகுலின் வியட்நாம் பயண விவகாரம், அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், சர்மிஷ்தா இவ்வாறு வினவியுள்ளார். “ஒரு சாதாரண குடிமகன் என்ற முறையில், இந்தக் கேள்வியை கேட்க விரும்புவதாகவும் சர்மிஷ்தா தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியால் காத்திருக்க முடியாதா என்றும் சர்மிஷ்தா கேட்டுள்ளார்.    

  • மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளுக்கு எதிராக 63 மனுக்கள்

    மும்பை, ஜன. 8 ; மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை எதிர்த்து இந்திய கூட்டணி வேட்பாளர்கள் 60க்கும் மேற்பட்ட மனுக்களை மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். அவற்றில் முறைகேடு, மறைக்கப்பட்ட குற்றவியல் வழக்குகள், சொத்துகளை மறைத்தல், EVM கோளாறுகள், கையூட்டு, வெளிப்படைத்தன்மை இல்லாமைபோன்ற காரணங்களுக்காக மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ், உத்தவ் தாக்ரேவின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சியினர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.        

  • நயன்தாராவுக்கு எதிரான வழக்கில் நீதிபதி கண்டிப்பு

    சென்னை, ஜன.8 ; நயன்தாரா மீது தனுஷ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இனி அவகாசம் கோரக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில், ‘நானும் ரவுடிதான்’ படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதாகக் கூறி வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, நெட்பிளிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளிவைக்குமாறுகோரிக்கை விடுக்கப்பட்டது. இனி கால அவகாசம் கேட்கக் கூடாது என்று கூறிய நீதிபதி, இறுதி விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.  

  • ஹன்சிகா மோத்வானி மீது குடும்ப வன்முறை புகார்

    சென்னை, ஜன. 8 ; குடும்ப வன்முறை புகாரில், நடிகை ஹன்சிகா மோத்வானி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்தின் மனைவியும் தொலைக்காட்சி நடிகையுமான முஸ்கன் நான்சி, இந்தப் புகாரை அளித்துள்ளார். ஹன்சிகாவும் அவரது தாயாரும் சேர்ந்து தனது குடும்ப வாழ்க்கையில் பிரச்னை ஏற்படுத்தியதுடன், தன்னை துன்புறுத்தியதாகவும் புகாரில் நான்சி குறிப்பிட்டுள்ளார். தற்போது ஹன்சிகா மோத்வானியின் அண்ணன் பிரசாந்த் மோத்வானியும் அவரது மனைவி முஸ்கன் நான்சியும் பிரிந்து தனியே வாழ்ந்து வருகின்றனர்.            

  • “உள்நாட்டில் விளையாடினால் ஆட்டத்தை புதுப்பிக்கலாம்”

    டெல்லி, ஜன. 8 ; ரோகித் சர்மாவும், விராட் கோலியும் மீண்டும் உள்நாட்டு கிரிக்கெட்டிற்கு திரும்புவதன் மூலம் ஆட்டத்தை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று, முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். நீண்ட காலத்திற்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும்போது, இரண்டு காரணங்களுக்காக உள்நாட்டு கிரிக்கெட்டை விளையாடுவது முக்கியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். “ஒன்று, தற்போதைய தலைமுறையினருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். மற்றொன்று, உங்களது அனுபவத்தை இளைய தலைமுறையினருக்கு கடத்த முடியும்” எனவும் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.    

  • ரியல் மேட்ரிட் வீரர் வினிசியஸ் 2 போட்டிகளில் விளையாட தடை

    மேட்ரிட், ஜன. 8 ; ரியல் மேட்ரிட் கால்பந்து வீரர் வினிசியஸ் ஜூனியர் சிவப்பு அட்டை பெற்றதால், 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. லா லிகா தொடரில், வாலென்சியா அணிக்கு எதிரான ஆட்டத்தில், அவ்வணியின் கோல் கீப்பரை கழுத்தின் பின்புறத்தில் தள்ளி வினிசியஸ் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். இதனால் அவருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு, 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சவுதி அரேபியாவில் நடைபெறும் ஸ்பானிஷ் சூப்பர் கோப்பையில் வினிசியஸ் விளையாட முடியும்.

Back to top button