மேற்குக்கரையில் 3 பேரை கொன்றது இஸ்ரேல் படை
காஸாவில் இடம்பெயர்ந்தோர் பனிப்புயல்களால் கடும் அவதி

காஸா, பிப்.10; ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் இஸ்ரேலிய படைகள் மூன்று பாலஸ்தீனியர்களை சுட்டுக்கொன்றன. அவர்களில் ஒரு கருவுற்ற பெண் அடங்குவார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரைப் பகுதியில் இஸ்ரேல் படைகளின் பலவாரத் தாக்குதல்களால் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 35,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
பனிப்புயல்களால் வடக்கு காஸாவில் மக்கள் அவதி

இதனிடையே, பனிப்புயல்களால் வடக்கு காஸாவில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.
“அமெரிக்காவுக்கு ரியல் எஸ்டேட் வியாபாரியின் மனநிலை”

இதனிடையே, காஸாவை அழகுபடுத்தும் திட்டம் என்ற பெயரில், அமெரிக்கா தீட்டியிருக்கும் திட்டத்திற்கு ஹமாஸ் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
“பாலஸ்தீனிய பிரச்னையை ரியல் எஸ்டே வியாபாரியின் மனநிலையுடன் அணுகுவது தோல்வியில் முடியும்” என்று ஹமாஸ் எச்சரித்துள்ளது.
இதனிடையே காஸா மீதான இஸ்ரேலின் போரில் 48,189 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,11,640 பேர் காயமடைந்ததாகவும் பிரதேசத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காஸாவில் குறைந்தது 62,000 படுகொலை எனத் தகவல்

ஆனால், காஸாவில் குறைந்தது 62,000 பேர் கொல்லப்பட்டதாக அரசு ஊடக அலுவலகம் கூறியிருக்கிறது. இடிபாடுகளில் சிக்கிய ஆயிரக்கணக்கானோர் இறந்துவிட்டதாகக் கருதப்படுவதால், உயிரிழப்பு அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு, அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் குறைந்தது 1,139 பேர் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் சிறைபிடிக்கப்பட்டனர்.







