“துபேவுக்குப் பதில் ராணாவைச் சேர்த்தது வெட்கக்கேடு”
"முறையான ஏமாற்றுவேலை" என சமூகவலைதளங்களில் வசை

புனே, பிப்.1; புனே டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியில் ஷிவம் துபேக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டது, “Proper Cheating…” அதாவது “முறையான ஏமாற்றுவேலை” என சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
ஆடும் லெவனில் இல்லை; ஆனால், உள்ளே வந்தார்..!!

இந்திய அணிக்காக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்ஷித் ராணா, நேற்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் Playinh eleven எனப்படும் விளையாடும் லெவன் அணியில் இடம்பெறவில்லை.
இருப்பினும், ஷிவம் துபேவின் தலைக்கவசத்தை பந்து தாக்கியதால், அவருக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா விளையாட வந்தார்.
பகுதிநேர பந்துவீச்சாளருக்கு பதிலாக முழுநேரப் பந்துவீச்சாளரா?

பகுதிநேரமாக பந்துவீசும் ஆல்-ரவுண்டர் ஷிவம் துபேவுக்குப் பதிலாக முழுநேர பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா இந்திய அணிக்குள் வந்தது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் வசைபாடும் நெட்டிசன்கள்

இந்த விவகாரம் தற்போது சமூகவலைதளங்களிலும் பேசுபொருளாகி உள்ளது. இது ஒரு “Proper Cheating…” அதாவது “முறையான ஏமாற்றுவேலை” என்று நெட்டிசன்கள் வசைபாடி வருகின்றனர்.
“போட்டி நடுவர் வாய்பேச முடியாதவரா?” எனக் கேள்வி

X தளத்தில் பதிவிட்டுள்ள ஒரு ரசிகர், “போட்டி நடுவர் வாய்பேச முடியாதவரா? அவருக்கு கிரிக்கெட் பற்றி ஏதாவது தெரியுமா?” என வினவியுள்ளார்.
“கிரிக்கெட் வாரியத்தின் முறையான ஏமாற்றுவேலை”

“இது கிரிக்கெட் வாரியத்தின் முறையான ஏமாற்றுவேலை; ஷிவம் துபே ஒரு பகுதிநேர பந்துவீச்சாளர், டி20 போட்டியில் பயனற்ற பந்துவீச்சாளர்; அவர், ஐபிஎல் மற்றும் இந்திய அணிக்காக அதிகம் பந்துவீசவில்லை” எனச் சாடியுள்ளார்.
ஹர்ஷித் ராணாவை ஷிவம் துபேக்கு (இரண்டு முற்றிலும் மாறுபட்ட வீரர் வகைகள்) பதிலாக விளையாட அனுமதித்தது மூர்க்கத்தனமானது எனக் கடுமையாகச் சாடியிருக்கும் ஒரு ரசிகர், உண்மையைச் சொல்லப்போனால் இந்தியா 12 வீரர்களுடன் விளையாடுகிறது என விமர்சித்துள்ளார்.







