சென்னையில் விமான சாகசங்கள்… சாதனை முயற்சி!

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு விழாவை முன்னிட்டு, வரும் அக்டோபர் 6 ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் மாபெரும் விமானக் காட்சியை நடத்த, இந்திய விமானப் படை திட்டமிட்டுள்ளது.
“ஆற்றல்மிக்க, வலிமையான, தன்னிறைவு கொண்ட இந்திய விமானப்படை” என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்நிகழ்வு அக்டோபர் ஆறாம் தேதி காலை 11 மணிக்குத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தாம்பரம் விமானப்படை தளத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விமானக் காட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏர் வைஸ் மார்ஷல் பிரேம் குமார், “மொத்தம் 72 விமானங்கள் பங்கேற்கும் இந்த காட்சியில், ஆகாஷ் கங்கா குழுவின் வான்குடை பாய்தல், சூர்யகிரண் குழுவின் விமான வித்தைகள், மற்றும் சாரங் குழுவின் ஹெலிகாப்டர் காட்சி ஆகியவை சிறப்பு நிகழ்வுகளாக இடம்பெறும். இந்தியத் தயாரிப்பு விமானங்களான தேஜஸ் மற்றும் பிரசண்ட் உட்பட பல்வேறு விமானங்கள் காட்சிப்படுத்தப்படும். இந்த பிரமாண்டமான நிகழ்வைக் காண 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனை நிகழ்வை, லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்திலும் இடம்பெறச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.






