சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா பணி ஓய்வுபெற்றதை அடுத்து, நீதிபதி ஆர். மகாதேவன் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தார்.
அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, மூத்த நீதிபதி கிருஷ்ணகுமார், பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி கே.ஆர். ஸ்ரீராமை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து, குடியரசுத் தலைவர் அண்மையில் உத்தரவிட்டிருந்தார். அதன்படி புதிய தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், இன்று பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தலைமை நீதிபதிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, இந்திரா பானர்ஜி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என். நேரு, ரகுபதி, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் மற்றும் மத்திய – மாநில அரசு வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சுதந்திர இந்தியாவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் 34வது தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள கே.ஆர்.ஸ்ரீராம், 2025ம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி வரை பதவியில் நீடிப்பார்.
கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஸ்ரீராம், மும்பை பல்கலைக்கழகம் மற்றும் லண்டனில் சட்டம் பயின்று, 1986ஆம் ஆண்டு வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். மும்பை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வணிகச் சட்டம், சேவை வரி உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளில் கே.ஆர். ஸ்ரீராம் ஆஜராகியுள்ளார்.






