மீண்டும் ஜோடி சேரும் சூர்யா – திரிஷா
20 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்ப்பார்ப்பு

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படத்தில் நடிகை திரிஷா நடிப்பதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது.
நடிகர் சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா 45 எனும் பெயரிடாத புதிய படத்தில் நடித்து வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கோவையில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட செலவில் தயாரிக்கிறது. இப்படத்திற்கு முதலில் ஏ.ஆர் ரகுமான் இசை அமைப்பதாக இருந்தது. ஆனால் தனிப்பட்ட காரணங்களால் அவர் விலகியதால், இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் சூர்யா 45 படத்தின் அடுத்த அப்டேட்டை படக்குழு அதிரடியாக வெளியிட்டுள்ளது. அதில் படத்தின் நாயகியாக நடிகை திரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே சூர்யா – திரிஷா ஜோடியாக நடித்த “மௌனம் பேசியதே”, “ஆறு”
ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்து வசூலில் கலக்கின. இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த காதல் ஜோடி இணைந்து நடிக்க உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இந்த படத்தில் திரிஷா வழக்கறிஞராக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தற்போது தமிழில் அஜித்துடன் “விடாமுயற்சி” மற்றும் “குட் பேட் அக்லி”, மணிரத்னம் இயக்கத்தில் கமலின் ‘தக் லைப்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் திரிஷா. இதேபோல் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவியுடன் ‘விஸ்வம்பரா’ படத்திலும், மலையாளத்தில் 2 திரைப்படங்களிலும் திரிஷா நடித்து வருகிறார். இப்போது நடிகர் சூர்யாவின் புதிய படத்திலும் அவர் இணைந்துள்ளதால், தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக தொடர்ந்து வலம் வந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார் நடிகை திரிஷா.







