‘ரூ.1 கோடியை வட்டியுடன் சிம்புவுக்கு திருப்பிச் செலுத்துக’

கொரோனா குமார் பட வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

கொரோனா குமார் திரைப்படம் தொடர்பாக நடிகர் சிம்பு மற்றும் வேல்ஸ் பட நிறுவனத்துக்கு இடையிலான பிரச்னை முடிவுக்கு வந்ததை அடுத்து, நீதிமன்றத்தில் செலுத்திய ஒரு கோடி ரூபாயை வட்டியுடன் நடிகர் சிம்புக்கு திருப்பி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மறைந்த நகைச்சுவை நடிகர் ஐசரிவேலனின் மகன் ஐசரி கணேஷின் நிறுவனமான வேல்ஸ் நிறுவனம் சார்பில், கொரோனா குமார் என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டு வந்தது. பட நாயகனாக சிம்புவை ஒப்பந்தம் செய்து, அவருக்கு 9 கோடியே 50 லட்சம் ரூபாய் சம்பளமாக பேசி, 4 கோடியே 50 லட்சம் ரூபாயை முன்பணமாக கொடுத்துள்ளனர்.

சிம்புவுக்கு தடைகோரி வழக்கு

2021ஆம் ஆண்டில் பணத்தைப் பெற்றுக் கொண்ட சிம்பு, படப்பிடிப்புக்கு சரியாக வராமல் இழுத்தடித்ததால், மற்ற படங்களில் நடிக்க அவருக்கு தடை விதிக்கக் கோரிவேல்ஸ் பட நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையின்போது, ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த சிலம்பரசனுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதேவேளையில், பிரச்னைக்குத் தீர்வு காண, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.கண்ணன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.

சிம்பு-வேல்ஸ் நிறுவனம் சமரசம்

இதுதொடர்பான வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன் இன்று (டிச.13) விசாரணைக்கு வந்த போது, நடிகர் சிம்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்தியஸ்தர் முன் உள்ள வழக்கை இரு தரப்பினரும் திரும்பப் பெற்றுவிட்டதாக கூறினார். எனவே, நடிகர் சிம்பு தரப்பில் டெபாசிட் செய்யப்பட்ட ஒரு கோடி ரூபாயை வட்டியுடன் சேர்த்து ஒரு கோடியே 4 லட்சத்து 98 ஆயிரத்து 917 ரூபாயை திருப்பித்தர உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, டெபாசிட் தொகையை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

Related Articles

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x