தொடங்கியது மகாளய பட்சம்!

மாதாமாதம் அமாவாசை வருகிறது. ஆனால் நம் முன்னோர்கள் ஆடி, புரட்டாசி மற்றும் தை அமாவாசையை மட்டும் சிறப்பாக வழிபட்டு வந்துள்ளனர். இவை அனைத்தையும் விட புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படுகிறது. இது மிகவும் விசேஷமானதாகும். மகாளய பட்சம் எப்போதும், ஆவணி பௌர்ணமி முடிந்த மறுநாள் ஆரம்பமாகி அதற்கு அடுத்து வரும் அமாவாசை வரையிலான இரண்டு வார காலம் இருக்கும்.
மகாளய பட்ச காலத்தில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்த காலக்கட்டத்தில் வரும் பரணி மஹாபரணி என்றும், அஷ்டமி மத்யாஷ்டமி என்றும், திரியோதசி கஜச்சாயை என்றும் கூறப்படுகிறது. மாதந்தோறும் முன்னோர்களுக்கு தானம் செய்ய முடியாதவர்கள் இந்த காலத்தில் தானங்களை செய்வதால் 12 மாதங்களிலும் தானம் செய்த பலன்கள் கிடைக்கும்.
வேத நூல்கள் சொல்லும் கதை :
பல தெய்வீக நூல்களில் மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. மகாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர் தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மை பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர். இந்நாட்களில் நம் வீடுகளை மிக தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக்கூடாது. உள்ளத்தையும், உடலையும் தூய்மையாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.
மகாளய பட்சத்தில் சுபகாரியம் செய்யலாமா?
மகாளய பட்ச காலத்தில் திருமணம் போன்ற எந்த சுபகாரியத்தையும் செய்யமாட்டார்கள். ஏனென்றால் இந்த காலப்பகுதி முழுக்க முழுக்க முன்னோர்களுக்கு உரியது என்று கருதப்படுகிறது. சிரார்த்தம், திதி கொடுப்பது, தான, தர்மங்கள் செய்வது, பங்காளிகளுக்கு இடையிலான பிரச்னைகளை தீர்ப்பது, அதாவது சொத்து உள்ளிட்ட பிரச்னைகளில் உள்ள வில்லங்கங்களை தீர்த்துக்கொள்ளும் காலம்தான் இந்த மகாளய பட்சம் என்பதாகும்.
மகாளய பட்சத்தில் வரும் திதியின் பலன்கள் :
மகாளய பட்சத்தின் இந்த பதினைந்து நாட்களும் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடையும்.
எந்த திதியில் என்ன பலன்?
• முதல் நாளான பிரதமை திதியில் தர்ப்பணம் செய்வதால் பணக்கஷ்டம் தீர்ந்து, பணம் வந்து சேரும்.
• இரண்டாம் நாளான துவிதியை திதியில் தர்ப்பணம் செய்வதால் பிறக்கும் குழந்தையின் குணநலன்கள் சிறப்பாக இருக்கும்.
• மூன்றாம் நாளான திருதியை திதியில் தர்ப்பணம் செய்வதால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
• நான்காம் நாளான சதுர்த்தி திதியில் தர்ப்பணம் செய்வதால் எதிரிகளின் தொல்லை இல்லாமல் வாழலாம்.
• ஐந்தாம் நாளான பஞ்சமி திதியில் தர்ப்பணம் செய்வதால் செல்வம் சேரும், நியாயமான சொத்துக்கள் கிடைக்கும். மேலும் வீடு, நிலம் முதலான சொத்துக்களை வாங்கி செல்வ செழிப்புடன் வாழலாம்.
• ஆறாம் நாளான சஷ்டி திதியில் தர்ப்பணம் செய்வதால் பேரும், புகழும் கிடைக்கும்.
• ஏழாம் நாளான சப்தமி திதியில் தர்ப்பணம் செய்வதால் உத்தியோகத்தில் தலைமை பதவி கிடைக்கும், தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும்.
• எட்டாம் நாளான அஷ்டமி திதியில் தர்ப்பணம் செய்வதால் அறிவாற்றல் பெருகும்.
• ஒன்பதாம் நாளான நவமி திதியில் தர்ப்பணம் செய்வதால் திருமணத்தடை நீங்கும். சிறந்த வாழ்க்கைத் துணை அமைவார்கள். குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைந்து, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.
• பத்தாம் நாளான தசமி திதியில் தர்ப்பணம் செய்வதால் நீண்ட நாட்களாக இருந்துவந்த ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
• பதினொன்றாம் நாளான ஏகாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் படிப்பு, விளையாட்டு மற்றும் கலைகளில் வளர்ச்சி அடைவார்கள்.
• பன்னிரண்டாம் நாளான துவாதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் தங்க நகைகள் சேரும். விலை உயர்ந்த ஆடை சேர்க்கை உண்டாகும்.
• பதின்மூன்றாம் நாளான திரியோதசி திதியில் தர்ப்பணம் செய்வதால் பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்க ஆயுள், ஆரோக்கியம், நல்ல தொழில் போன்றவை சிறப்பாக இருக்கும்.
• பதினான்காம் நாளான சதுர்த்தசி திதியில் தர்ப்பணம் செய்வதால் ஆயுள் விருத்தியாகும். நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். மேலும், எதிர்கால தலைமுறையினருக்கு நன்மை உண்டாகும்.
அடுத்து வரும் பதினைந்தாம் நாளானது மகாளய அமாவாசை. மகாளய பட்சத்தில் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும், நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும்.
மகாளய பட்ச காலத்தில் என்னென்ன பொருட்களை தானம் செய்ய வேண்டும் ?
அன்னதானம் – மகாளய பட்சத்தில் பித்ரு லோகத்தில் இருந்து நம்மைத் தேடி வரும் முன்னோர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுத்து அவர்களின் பசியைப் போக்குவதோடு, பசியோடு இருக்கும் ஏழை மக்களுக்கும் உணவு கொடுப்பதனால், நம்முடைய பல தலைமுறையினருக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக, சந்ததிகளின் வாழ்க்கையில் இருக்கும் தடை மற்றும் துன்பங்கள் என அனைத்தும் நீங்கும்.
ஆடை தானம் – மகாளய பட்சத்தில் ஏழை, எளியோர் மற்றும் பிராமணர்களுக்கு அன்னதானம் கொடுப்பதோடு, ஆடைகளையும் தானம் செய்ய வேண்டும். வேட்டி, துண்டு போன்றவற்றை தானமாக கொடுக்கலாம்.
நெய் தானம் – மகாளய பட்சத்தில் சுத்தமான பசு நெய் தானமாக வழங்குவதன் மூலம் குடும்ப பிரச்னைகள் நீங்கி முன்னோர்களின் ஆசிகள் முழுமையாக கிடைக்கும். எனவே, இந்த காலத்தில் நெய் தானம் செய்வது நல்லது.
தங்கம் மற்றும் வெள்ளி தானம் – மகாளய பட்ச காலத்தில் தங்கத்தை தானம் செய்வதன் மூலம் தானம் செய்பவர் சந்தித்து வரும் குரு தோஷம் அல்லது குரு கிரகத்தினால் ஏற்படும் பிரச்னைகள் நீங்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், எல்லா நோய்களிலிருந்தும் விடுபட்டு நிம்மதியான வாழ்வு கிடைக்கும். அதே நேரத்தில், வெள்ளி சந்திரனை குறிப்பதாக கருதப்படுகிறது. எனவே, இந்நாட்களில் வெள்ளியை தானம் செய்வதால் அனைத்து விதமான நோய்களிலிருந்தும் விடுதலை கிடைக்கும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் ஒற்றுமை போன்றவை உண்டாகும்.
எள் தானம் – மகாளய பட்ச காலத்தில், கருப்பு எள் தானம் செய்வதன் மூலம் அனைத்து தடைகளிலிருந்தும் விடுதலை பெறுவர். இதுமட்டுமின்றி கிரகங்கள் மற்றும் ராசியினால் ஏற்படும் தடைகள் விலகும். மேலும், நெருக்கடிகள் நீங்கும்.
உப்பு தானம் – மகாளய பட்சத்தின் போது உப்பு தானம் செய்வது எதிர்மறை சக்தியிலிருந்து விடுதலை அளிக்கிறது. அதுமட்டுமின்றி இந்நாட்களில் உப்பை தானம் செய்வதால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும்.
எனவே மறக்காமல் இந்த மகாளய பட்ச காலத்தில் நம்மால் முடிந்த தானங்களை செய்து வழிபடுவோம்.







