2025ல் அடியெடுத்து வைத்த முதல் நாடு நியூசிலாந்து
புத்தாண்டு உலகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்

நியூசிலாந்து, ஜன.01 ; உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், 2025ஆம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைத்த முதல் நாடு என்ற பெருமை நியூசிலாந்துக்கு கிடைத்துள்ளது.
2024ஆம் ஆண்டு முடிவடைந்து, 2025ஆம் ஆண்டு பிறந்துள்ளதை வரவேற்கும் விதமாக பல்வேறு நாடுகளிலும் வண்ணமயமான கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, புத்தாண்டுக்குள் அடியெடுத்து வைத்த முதல் நாடு என்ற பெருமை நியூசிலாந்துக்கு கிடைத்திருக்கிறது.
2025-ல் அடியெடுத்து வைத்த முதல் நாடு நியூசிலாந்து

பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் ஆஸ்திரேலிய கண்டத்தில் அமைந்துள்ளது, நியூசிலாந்து நாடு. அந்த நாட்டில் நடைபெற்ற வண்ணமயமான புத்தாண்டு கொண்டாட்டம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தின் சின்னமாக விளங்கும் (sky) ஸ்கை கோபுரத்தில் நடைபெற்ற வாணவேடிக்கை மற்றும் பண்பாட்டுநிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு, புத்தாண்டை குதூகலமாக வரவேற்றனர்.
விண்ணை வண்ணமயமாக்கிய வாணவேடிக்கை நிகழ்ச்சிகளைக் கண்டு மக்கள் பரவசமடைந்தனர். அவர்கள் ஆடிப்பாடி நடனமாடி புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடினர்.
இதேபோல் தலைநகர் வெலிங்டனிலும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் கண்கவர் லேசர் ஒளி நிகழ்ச்சிகளுடன் மக்கள் புத்தாண்டுக்கு வரவேற்பளித்தனர்.
முதல் நாடு எனக்கூறும் கிரிபாட்டி

அதேவேளையில், ஓசியானாவில் உள்ள கிரிபாட்டி தீவு நாட்டில் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அந்த நாடு, தாங்கள் தான் புத்தாண்டில் அடியெடுத்த முதல் நாடு என்று கூறியுள்ளது.
இதேபோன்று ஐரோப்பிய நாடுகளிலும், 2025ஆம் ஆண்டை வரவேற்று, விண்ணை ஒளிரச் செய்த வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆனாலும், சில நாடுகளில் மோசமான பனிப்பொழிவு காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டன.
சிரியாவில் கோலாகல கொண்டாட்டம்

சிரியாவில் அதிபல் பஷர் அல்-அசாத் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெருந்திரளானோர் பங்கேற்று, பட்டாசுகளை வெடித்தும், இசையை ஒலிபரப்பியும் மகிழ்ந்தனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள தலைநகர் அபுதாபி மற்றும் துபாயில், புத்தாண்டு பிறந்ததும், கண்களுக்கு விருந்து படைக்கும் லேசர் ஒளி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
உலகப்புகழ்பெற்ற சிட்னியில் பரவசம்

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு உலகப் புகழ்பெற்ற ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்தில் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானோர் குதூகலத்துடன் பங்கேற்றனர். விண்ணை வண்ணமயமாக்கிய இந்நிகழ்ச்சியைக் கண்டு மக்கள் வியந்தனர்.
சிட்னி துறைமுக புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வை உலகம் முழுவதும் தொலைக்காட்சிகளில் கோடிக்கணக்கானோர் கண்டுகளித்தனர்.
இதேபோன்று உலகின் பல்வேறு நாடுகளிலும் 2025ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.







