“குடியரசுத் தலைவரை அவமதித்துவிட்டார் சோனியா”
தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

டெல்லி, ஜன.31; குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ‘ஏழை’ என்று கூறியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார். அரச குடும்பத்தினர் ஒரு பழங்குடியின மகளை அவமதித்துவிட்டதாக பிரதமர் விமர்சித்தார்.
முர்முவை அவமதித்த அரச (சோனியா) குடும்பம்: மோடி

டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பரப்புரைக் கூட்டத்தில் பேசிய மோடி, “குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பழங்குடியின குடும்பத்திலிருந்து வந்துள்ளார்; அவரது தாய் மொழி இந்தி அல்ல, ஒடியா; இன்று நாடாளுமன்றத்தில் அற்புதமாக உத்வேகம் அளித்து உரை நிகழ்த்தினார்; ஆனால், காங்கிரஸ் அரச குடும்பம் அவரை அவமதித்துள்ளது; அரச குடும்ப உறுப்பினர் ஒரு படி மேலே சென்று ஒரு பழங்குடியின மகளின் பேச்சு சலிப்பை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார்” என மோடி குற்றஞ்சாட்டினார்.
“பழங்குடிகளை அவமதித்துவிட்டார் சோனியா காந்தி”

“சோனியாவின் இந்தக் கருத்து நாட்டின் 10 கோடி பழங்குடியின சகோதர, சகோதரிகளை அவமதிக்கும் செயலாகும்” என பிரதமர் மோடி பேசினார்.
சோனியா காந்தி என்ன சொன்னார்?

முன்னதாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஆற்றிய உரைக்கு பதிலளித்த சோனியா காந்தி, “குடியரசுத் தலைவர் கடைசியில் மிகவும் சோர்ந்துவிட்டார், அவரால் பேச முடியவில்லை, பாவம்” என்று குறிப்பிட்டார்.
இதனை பிரதமர் மோடி தனக்கு ஏதுவாக மா ற்றிக்கொண்டு சோனியாவை விமர்சிப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது. இவ்வாறு பேசுவது பிரதமர் மோடிக்கு கைவந்த கலை என்றும் காங்கிரஸ் கட்சி வசைபாடியுள்ளது.







