11 கோல்கள் அடித்து மனதை திருடிய தியாகோ மெஸ்சி..!
புலிக்குப் பிறந்தது பூனை ஆகாது என நிரூபித்த தருணம்

மியாமி, பிப்.08; அமெரிக்காவில் நடைபெற்றுவரும் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான MLS கோப்பை கால்பந்து போட்டியில், லியோனல் மெஸ்சியின் மூத்த மகன் தியாகோ 11 கோல்கள் அடித்து பார்வையாளர்களின் மனதை கொள்ளை கொண்டார்.
திறமை என்பது மரபியலில் இருந்து வருமா என்ற விவாதம் நீண்ட காலமாக உள்ளது; மரபியலில் மட்டும் வந்துவிடாது, சரியான சூழலும் கடின உழைப்பும் இருந்தால் தான் வெற்றி வயப்படும் என்று கூறப்படுவதுண்டு.
மெஸ்சி மகன் தியாகோவுக்கு 12 வயதிலேயே மரபியல் வேலை?

ஆனால், அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சியின் மூத்த மகன் தியாகோவுக்கு 12 வயதிலேயே மரபியல் வேலை செய்திருப்பது போல் தெரிகிறது.
ஆம், அமெரிக்காவில் நடைபெற்றுவரும் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான MLS கோப்பை கால்பந்து போட்டியில், தியாகோ இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.
11 கோல்கள் அடித்து வியக்க வைத்த தியாகோ மெஸ்சி

அதன்படி, அட்லாண்டிக் யுனைடெட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தியாகோ மெஸ்சி 11 கோல்கள் அடித்து, ரசிகர்களை வியக்க வைத்தார்.
ஆட்டத்தின் 12ஆவது நிமிடத்தில் தியாகோவின் கோல் மழை தொடங்கியது. முதல் பாதியில் நான்கு கோல்களை அடித்த அவர், இரண்டாவது பாதியில் மேலும் 7 கோல்கள் அடித்து திணறடித்தார்.
மகனின் திறமையைப் பார்த்து வியந்த தந்தை மெஸ்சி

இறுதியில் இன்டர் மியாமி அணி 12-0 பூஜ்யம் என்ற கோல் கணக்கில் அட்லாண்டா யுனைடெட் அணியை தோற்கடித்தது.
இந்தப் போட்டியைக் காண வந்திருந்த லியோனல் மெஸ்சி தனது மகன் தியாகோவின் ஆட்டத்திறனை வெகுவாக ரசித்தார். இன்டர் மியாமி கிளப்பின் மூத்த வீரர்கள் அணியில் லியோனல் மெஸ்சி விளையாடி வருவது நினைவுகூரத்தக்கது.







