‘புஷ்பா-2’ பட நெரிசலில் பெண் உயிரிழந்த விவகாரம்
அல்லு அர்ஜூன் மீது தெலங்கானா முதல்வர் சாடல்

தெலங்கானா: தெலங்கானாவில், ‘புஷ்பா-2’ பட திரையிடலின்போது போலீஸ் அனுமதியின்றி அல்லு அர்ஜூன் பங்கேற்றதால்தான், ஒரு பெண் உயிரிழக்க நேரிட்டதாக, மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றஞ்சாட்டி உள்ளார்.
தெலங்கானா சட்டப்பேரவையில், ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் எம்எல்ஏ அக்பருதீன் ஓவைசிநேற்று (டிச.21), இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, போலீஸ் அனுமதியின்றி அல்லு அர்ஜூன் திரையரங்க ‘புஷ்பா-2’ பட சிறப்புத் திரையிடலில் கலந்து கொண்டதாக தெரிவித்தார். கூட்டநெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த பிறகும், நடிகர் அல்லு அர்ஜூன் திரையரங்கை விட்டு வெளியே வரவில்லை என்று முதலமைச்சர் சாடினார். இதனால் போலீசார் அவரை வலுக்கட்டயமாக வெளியேற்றினர் என்று ரேவந்த் ரெட்டி விளக்கமளித்தார்.
அல்லு அர்ஜூன் மீது முதலமைச்சர் சாடல்

இந்த சம்பவம் தொடர்பாக வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகளை சுட்டிக்காட்டிப் பேசிய முதலமைச்சர், அதிக கூட்டத்தை பொருட்படுத்தாமல், சாலை அணிவகுப்பு நடத்தி அங்கு திரண்டிருந்தவர்களைப் பார்த்து அல்லு அர்ஜூன் கை அசைத்ததாக ரேவந்த் ரெட்டி சாடினார்.

‘புஷ்பா-2’ படத்தின் சிறப்பு திரையிடலுக்கு முன்னணி நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் வருவார்கள் என்பதால், பாதுகாப்பு கோரி திரையரங்க நிர்வாகம் டிசம்பர் 2ஆம் தேதி போலீசிடம் கடிதம் அளித்ததாக ரேவந்த் ரெட்டி தெரிவித்தார். ஆனால், கூட்டத்தை நிர்வகிப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டும், திரையரங்கில் ஒரேயொரு நுழைவு வாயிலும், வெளியேற ஓரேயொரு வழி மட்டுமே இருப்பதாலும், திரையரங்க நிர்வாகத்தின் விண்ணப்பத்தை போலீஸ் நிராகரித்ததாகவும், முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.







